சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டுத் திறனாளர்களுக்கான நுழைவுத் தகுதிகள் உயர்த்தப்படவுள்ளன. எம்ப்ளாய்மெண்ட் பாஸ் எனப்படும் வேலை அனுமதி அட்டையைப் பெறுவதற்கான தகுதிச் சம்பள வரம்பு உயர்த்தப்படும். அவர்களுக்கான கல்வித் தகுதியும் கடுமையாக்கப்படும். அதுகுறித்த முழுமையான விவரங்களை மனிதவள அமைச்சு விரைவில் வெளியிடும் என்று நேற்று தேசிய தினப் பேருரையில் பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
மேலும் முதலாளிகளுடனும் தொழிற்சங்கங் களுடனும் இணைந்து நியாயமான வேலை சேர்ப்புத் திட்டங்களை அமைச்சு உருவாக்கும் என்றும் பிரமதர் கூறினார். சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய அம்சங்களில் ஒன்று வேலைகள். சிங்கப்பூரர்களுக்கு வேலையில்லாத் திண் டாட்டம் இல்லை என்ற போதும் வெளிநாட்டினர் வழங்கக் கூடிய போட்டி குறித்து அவர்கள் கவலை கொள்கின்றனர். அவர்களின் கவலையைத் தாம் புரிந்து கொண்டாலும், எல்லா நிலைகளிலும் சில வெளி நாட்டு ஊழியர்கள் கட்டாயம் தேவைப்படுகிறார்கள் என்றார் பிரதமர்.
ஆனால் ஊழியர் அணியில் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து முக்கியமான பங்கு வகிப்பதை அர சாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் உறுதியளித்தார். வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப் பாடுகள் கட்டங்கட்டமாக உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதுபோன்ற ஊழியர்கள் அதிகம் தேவைப்படும் சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிலையையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார் பிரதமர்.
ஊழியர் அணியின் மேல்தட்டில் நாம் தொடர்ந்து திறனாளர்களையும் தொழில் முனைவர்களையும் ஈர்க்க வேண்டும். அதன்மூலம்தான் சிங்கப்பூர் அனைத்துலக நிலையில் போட்டித் தன்மையுடன் திகழ முடியும். கீழ் நிலைக்கும் மேல் நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள வேலைகளில் இருப்போர்தான் வெளிநாட்டினர் கொடுக்கும் போட்டி பற்றி அதிகக் கவலை கொண்டிருக்கின்றனர். அவர்கள் பட்டதாரிகளாகவும் பட்டயம் பெற்றவர்களாகவும் இருந்தாலும் வெளிநாட்டினரிடமிருந்து வரும் போட்டி குறித்து கவலை கொள்கின்றனர். அவர்களைக் கருத்தில் கொண்டே கடுமையான தகுதித் தேவைகள் புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
ஆனால் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு வருவதை சிரமமாக்குவதால் சிங்கப்பூரர்களுக்கு சிறந்த வேலைகளும் உயர்ந்த சம்பளமும் கிடைக்கும் என்று பொருள் படாது என்று பிரதமர் எச்சரித்தார். சீனா ஆண்டுதோறும் 7 மில்லியன் பட்டதாரிகளை உருவாக்குகிறது. அவர்களின் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணரப்படும் என்றார் பிரதமர். நம் வேலைகளைக் கட்டிக் காப்பதற்கு ஒரே வழி நமது திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதும், மற்றவர்கள் கற்றுக் கொள்ளாத வேலைகளைக் கற்றுக் கொள்வதுமே என்றார் பிரதமர்.
No comments:
Post a Comment