Wednesday, August 17, 2011

அமெரிக்காவுக்கு அல் காய்தா மீண்டும் மிரட்டல்

பின்லேடன் கொலைக்கு பழி வாங்கப்போவதாக அமெரிக்காவுக்கு அல் காய்தா தலைவர் ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக இணைய தளம் ஒன்றில் ஜவாகிரியின் வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் தோன்றிய அவர், 12 நிமிடங்கள் பேசினார். அப்போது உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதில், அல் காய்தா தலைவர் பின்லேடனை கொன்று அவரது உடலை அமெரிக்கா கடலில் வீசியது. அவரது மனைவிகள் மற்றும் மகன்களை அமெரிக்கா பிடித்து சென்றது. அதற்காக அமெரிக்காவை பழி வாங்குவோம்.

சமீபத்தில் மக்கள் புரட்சி ஏற்பட்ட துனிசியா மற்றும் எகிப்தில் புதிய அரசு அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல் படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜவாகிரி அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய நபர் ஆவார்.கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் அல் காய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பின்லேடனுடன் இவரும் முக்கிய நபர் ஆவார்.தற்போது இவர் தலைமறைவாக உள்ளார்.

அதேநேரம் சிஐஏ-வின் ரகசிய ஏவுகணைத் தாக்குதலுக்கு மையமாக பயன்பட்டு வந்த பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பாலைவன விமான தளத்தில் இருந்து வெளியேறுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில், அதனை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

அல் காய்தா தலைவர் பின்லேடனை, பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க படையினர் சுட்டுக்கொன்றதிலிருந்து, பாகிஸ்தானுக்குள் அமெரிக்காவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இஸ்லாமாபாத்துக்கு தென்மேற்கே 900 கிலோமீட்டர்கள் தொலைவில் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள பாலைவன விமான தளம்,சிஐஏ-வின் ரகசிய ஏவுகணைத் தாக்குதலுக்கு மையமாக பயன்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த விமான தளத்தில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்காவை பாகிஸ்தான் நிர்ப்பந்தித்தது.

அங்கிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அமெரிக்க இராணுவம் தங்குவதை பாகிஸ்தான் மக்கள் விரும்பவில்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி அகமது கூறியிருந்தார்.

ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டது.அப்பகுதியில் தொடர்ந்து செயல்படுவோம் என அமெரிக்கா இன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.

No comments:

Post a Comment