சிரேஷ்டபொலிஸ் அதிகாரி ஒருவருடைய வீட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை ,பணம், மற்றும் மாணிக்கக் கல் என்பவற்றை திருடிய சம்பவம் தொடர்பாக, நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யபட்ட தம்பதியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகை ,பணம், மற்றும் மாணிக்கக் கல் என்பவற்றில் ஒரு பகுதியை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இதேவேளை, இச் சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலை மறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் தான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சட்டத்தரணிகளூடாக நீர்கொழும்பு நீதிமன்றில் முன் பிணை மனுவை கடந்த திங்கட் கிழமை தாக்கல் செய்திருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மிரிஹானை விஷேட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொயிசா முன் பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்நிலையில் நீர்கொழும்பு பதில் நீதவான் சுவர்ணா பெரேரா முன் பிணை மனு கோரிக்கையை நிராகரித்தார்.
No comments:
Post a Comment