Monday, August 29, 2011

தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்! தங்கபாலு

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சில அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று தங்கபாலு கூறியுள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று கூறியதாவது ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாக சில கட்சிகள் தமிழகத்தில் நடத்தும் ஆர்ப்பாட்டங்களால், நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இங்கு சிலர் நாங்கள்தான் தமிழர்கள், தமிழ் உணர்வு எங்களுக்குத்தான் இருக்கிறது. நாங்கள்தான் தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

தமிழ் அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எங்களுக்கும் அந்த உரிமை உண்டு. நாங்களும் தமிழர்கள்தான். தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள் போராடலாம், கோரிக்கை வைக்கலாம். ஆனால் சிலர் தனிமனிதனுக்காக வக்காலத்து வாங்குகிறார்கள். ராஜிவ்படுகொலையை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம். இன்று ராஜிவ் கொலையாளிகளுக்காக போராட்டம் நடத்துபவர்களின் தலைவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் யாராவது ராஜிவ் காந்தியைப் போல படுகொலை செய்யப்பட்டிருந்தால், அந்த கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?

சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் கடமை. இன்று ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்காக சிலர் போராட்டம் நடத்துவதை தன்மானம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.


No comments:

Post a Comment