ரணிலை கட்சியில் இருந்து அகற்ற சதி!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமைப்பதவியிலிருந்து தூக்கி எறிவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் மகன் சஜித் பிறேமதாச வினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை எதிர்கட்சித் தலைவர்கள் இணைந்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த கருத்தினை வட மத்திய மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் கஸ்துரி அனுரத்தநாயக்க, கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தத் தேவையில்லை எனவும் அது மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட உறுதியான தீர்மானம் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து அகற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியானது சதிச் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் அண்மிக்கும் போது இப்படியான சதித் திட்டங்கள் வெளிப்படுவது சாதாரண விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அவர் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே திகழ்வதாகவும் கஸ்துரி அனுரத்தநாயக்க தமது உரையில் தெரிவித்துள்ளார்.
சஜித் குழு ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் கட்சியின் தலைமை மாற்றத்தற்கு ஒத்துழைத்ததாகக் கூறிய செய்தி தவறானது என இங்கு கருத்து வெளியிட்ட வட மத்திய மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் கஸ்தூரி அநுராதநாயக்க குறிப்பிட்டார்.
அதேநேரம் சிலர் குற்றம் சுமத்துவதுபோல ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வீதம் குறைவடையவில்லை என கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தயா கமகே கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
தேர்தல் தோல்விகளின்போது கட்சியின் தலைமைத்துவத்திற்கு மாத்திரம் அவதூறு கூறிவிட்டு கையை கழுவிக் கொள்வது சாதாரணமானதல்ல எனவும் தோல்வியை கட்சியில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 113 மாகாண சபை உறுப்பினர்களில் 20 பேரே சஜித் குழு சார்பில் சமூகமளித்திருந்ததாக கூறிய அவர், அவர்கள் பலாத்காரமாகவும் அமைப்பாளர் பதவி பறிபோகும் என்பதையும் கருத்திற் கொண்டுமே சமூகமளித்ததாக கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஊடகங்கள் மூலம் நடத்திச் செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமே தவிற பிரிவினைவாதத்தை ஏற்படுத்திக் கொண்டு செயற்படக் கூடாதென வட மேல் மாகாண எதிர்கட்சித் தலைவர் சமல் பிரியசன்ன தெரிவித்தார்.
கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 பேரை பிரித்துக் கொண்டு சென்று நம்பிக்கையை இழந்தவர் என்பதோடு, அவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்க ரணில் விக்ரமசிங்கவே வழிசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க குரோதம், பேதம் என்பவற்றை மனதில் வைத்துக் கொண்டு செயற்படுபவர் அல்ல எனவும் தலைமைத்துவத்தை வகிக்க மிகவும் உரித்துடையவர் எனவும் அவர் இங்கு ரணில் புகழ்பாடினார்.
0 comments :
Post a Comment