Wednesday, August 10, 2011

ஓட்டமாவடியில் பொலிஸார் – மக்கள் மோதல்! பலர் படுகாயம்!!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பொதுமக்கள் படுகாயமடைந்ததுள்ளதுடன் இரண்டு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மர்ம மனிதர்கள், கிறீஸ் பூதங்கள் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த 31 வயதான பெண்ணொருவரை தாக்கியதாக கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தாக்கினர்.

காயமடைந்த நிலையில் இருந்த அந்நபரை வாழைச்சேனை பொலிஸாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துவிட்டனர் என்று பரவிய வதந்தியை அடுத்து ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அப்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பொது மக்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இம்மோதல்களில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் நான்கு பொதுமக்களும் மீராவோடை மற்றும் வாழைச்சேனை வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு. போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் படையினர் வரவழைக்கப்பட்டு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் கமராவும் அப்பகுதியில் இருந்தவர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிராந்திய ஊடகவியலாளரான முர்ஸித் என்பவரது கமராவே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரை தொடர்பு கொண்டபோது தான் தாக்கப்பட்ட சம்பவத்தினை அவர் உறுதிப்படுத்தினார்.

No comments:

Post a Comment