முள்ளிவாய்காலில் குடியமர்த்தமுடியாது. அமைச்சரவைப் பேச்சாளர்.
வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கும் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப்போவதில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
போர் முடிவடைந்த பகுதிகளான முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை, தேசியப் பாதுகாப்புக்கருதி அந்த இடங்களில் மீளக்குடியமர்த்த முடியாதுள்ளது என்றார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தக் கூட்டம் நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்க முடியாது என்று அந்தப் பகுதி இராணுவத்தினர் அறிவித்துள்ளனரே என்று செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். தேசிய பாதுகாப்பு மற்றும் அரசின் தேவைகளைக் கருத்தில் கொண்டும் அந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த முடியாதுள்ளது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவும் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த முடியாது என்றார் அமைச்சர்.
மேலும் கூறுகையில் அரசியல் பேதங்கள் எவ்வாறு இருந்த போதிலும் எதிர்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பெறுப்பு அரசாங்கத்திடம் இருப்பாதாக மாநாட்டில் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் அரசியல் ரீதியில் கருத்து தெரிவிப்பதாக இருந்தால் அதனை செவிமடுக்க வேண்டியது ஜனநாயக இலட்சணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்குள் தலையிட அரசாங்கத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் கிடையாது என்றும் அரசாங்கம் அக் கட்சியின் பிரச்சினைகளில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பட்டார்.ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment