இன்றும் இலங்கைப் பிரச்சினை மக்களவையில் அமளிதுமளியுடன் தள்ளிவைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை மீது இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று விவாதம் நடக்க அவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெற்றிருந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஊழல் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து விவாதிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்ற காரணத்தினால், அப்பிரச்சனை மீதான விவாதம் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதோபோல்தான், நேற்று மக்களவையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனை மீதான விவாதம், இதே காரணத்தினால் விவாதிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இது ஒரு திட்டமிட்டச் செயலாகத் தெரியவில்லை. ஆனால் ஆழ்ந்து கவனித்தால், ஆளும் கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் இணைந்தே செயல்படுவது நன்றாகத் தெரிகிறது.
மாநிலங்களைவையில் இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும், அவையை நடத்த வந்து அமர்ந்த துணைத் தலைவர் ரஹ்மான் கான், இலங்கைத் தமிழர் பிரச்சனை மீது விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அப்போது பேச எழுந்த பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் அலுவாலியா, இலங்கைத் தமிழர் பிரச்சனை மீதான விவாதத்திற்கு தானும் தாக்கீடு அளித்து உள்ளதாகவும், அந்த பிரச்சனையை விவாதிப்பதற்கு முன்னர் ஊழல் பிரச்சனை மீது விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவைத் துணைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் து.இராசா, இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது பன்னாட்டு அளவில் கவனம் ஈர்த்துள்ளது என்றும், அதன் மீது ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, இலங்கைத் தமிழர் பிரச்சனை உணர்வுப் பூர்வமானது, இதனை நேற்று விவாதத்திற்கு வந்தபோதும், ஊழல் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக தட்டி கழித்தீர்கள், இப்போதும் அதனை தள்ளிவைக்க முயற்சிப்பது நியாயமல்ல என்று கூறினார்.
அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும் அவையில் உள்ளனர், எனவே இப்போதே விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது பேச எழுந்த நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர், அரசைப் பொறுத்தவரை ஊழல், இலங்கைப் பிரச்சனை ஆகிய இரண்டில் எதை முதலில் விவாதித்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதெனக் கூறினார்.
இதைக் கேட்ட பிறகு அவைத் தலைவர் ரஹ்மான் கான், ஊழல் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அறிவித்தார். இதை தமிழக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் அவையில் கூச்சலும் குழுப்பமும் ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்குத் தள்ளிவைப்பதாக ரஹ்மான் கான் அறிவித்தார்.
அந்த குறுகிய இடைவெளிக்குப் பிறகு கூடியதும், இலங்கைப் பிரச்சனையை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று ரஹ்மான் கான் அறிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை விவாதிப்பதில் மத்திய அரசுக்கு கடுமையான தயக்கம் இருப்பதே, இப்படிப்பட்ட 'தள்ளிவைப்பு'களில் எதிரொலிக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில், தமிழ்நாடு வரும்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க. நாடாளுமன்ற அவையில் காங்கிரஸ் கட்சியைப் போல் நடந்துகொள்வதை பார்க்க முடிகிறது.
ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று இலங்கை பிரச்சனை விவாதிக்கப்படும் என்று அவை நடவடிக்கைக் குறிப்பில் இருந்தது. அப்போது, '2009ஆம் ஆண்டில் சிறிலங்க இராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதன் மீது விவாதிக்கப்படும்' என்று கூறியிருந்தது. ஆனால், அன்று மாலையே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்த அவை நடவடிக்கைக் குறிப்பு மாற்றப்பட்டு, 'இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்கு இந்தியா அளித்துவந்த உதவிகளும், அவர்களின் நலன் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும்' என்று மாற்றப்பட்டது.
இவை யாவும், மத்திய அரசின் தயக்கத்தையும், இலங்கையில் நடந்த போர் குறித்து விவாதிக்கப்பட்டால், அது அங்கு நடந்த இனப் படுகொலையில் மத்திய அரசு வகித்த பங்குப் பற்றிய உண்மைகள் வெளியே தெரிந்துவிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே அது மறுவாழ்வு பற்றி மட்டும் பேச வேண்டு்ம் என்று கட்டுப்பாடு விதிக்கிறது.
0 comments :
Post a Comment