தமிழ் தேசியம் என்கின்ற போலிக்கோஷத்தினை வைத்து தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பல கட்சிகள் இணைந்திருந்தாலும் கட்சிக்கென்றதோர் வலுவான கட்டுப்பாடுகள் இன்றி சகலரும் தன்னிச்சையாக செயற்பட்டுவருவதையும் தலைமையை கைப்பற்ற அதன் முக்கிய புள்ளிகள் என தம்மை முதனிலைப்படுத்திக்கொள்வோர் முண்டிக்கொள்வதையும் தொடர்ச்சியாக உணர முடிகின்றது.
அண்மையில் வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ந.அனந்தராஜ் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபை உறுப்பினர் றெமெடியஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது கரியைப் பூசுவது போல் நடந்து கொண்ட முறை உலகத் தமிழ் இனத்தையே தலை குனிய வைத்துள்ளது என போர்தொடுத்துள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
தந்தை செல்வா அவர்களினால் தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஈழத் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை நிலை நிறுத்தவும் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையே ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்துக் காட்டிய தமிழ் மக்களினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் கரியைப் பூசுவது போல் யாழ் மாநகர சபை உறுப்பினர் றெமெடியஸ் நடந்து கொண்ட முறை உலகத் தமிழ் இனத்தையே தலை குனிய வைத்துள்ளது.
எந்தக் கட்சியினால் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாரோ அந்தக் கட்சியின் கொள்கைகளை மதித்து நடக்கவேண்டும் என்பதை றெமெடியஸ் உணராதவர் அல்ல. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும், கொள்கைக்கும் விரோதமாக நடந்து கொண்ட றெமெடியஸ், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும், அல்லாவிடில் எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ அந்த மக்களைப் புறக்கணித்தமைக்காக தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.
இல்லையேல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காகவும், மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியமைக்காகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரைக் கட்சியில் இருந்தும், மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கவேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக கொள்கைப் பற்றுறுதியுடன் செயலாற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் ஒத்துழைக்கக் கூடிய தன்மானம் மிக்க ஒருவரை நியமித்து கட்சியின் கௌரவத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
றெமெடியஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சக உறுப்பினர் ஒருவர் மீது சபையில் வைத்து போத்தலால் வீசி கெட்ட வார்த்தைகளால் பேசியிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் அணியைச் சேர்ந்த இவர் தொடர்ந்தும் தலைமையின் கட்டளையை மீறிச் செயற்பட்டு வருகின்றார் என்பதுடன் இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென கூட்டமைப்பு தெரிவித்திருந்தபோதும் அது தொடர்பாக எந்த தகவல்களும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment