நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு.
திருடப்பட்ட பொருட்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் சட்ட விரோதமாக பயன்படுத்தியமை, பொய் சாட்சிகளை தயாரித்தமை, செய்த குற்றங்கள் தொடர்பான ஆவணங்களையும் சாட்சிகளையும் இல்லாமற் செய்தமை, செய்த குற்றத்தை மறைத்தமை, சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமசிறி லியனகே உட்பட சந்தேக நபர்கள் நால்வரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவருடைய வீட்டில் பல இலட்சம் ருபா பெறுமதியான நகை மற்றும் பணம் என்பவற்றை திருடிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தம்பதியினரிடமிருந்து கைபப்பற்றப்பட்ட நகை மற்றும் பணம் என்பற்றில் ஒரு பகுதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமசிறி லியனகே தேடப்பட்டு வந்தார்.
இவர் தலை மறைவாக இருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் ஊடாக நீதி மன்றில் ஆஜரானார். இதன் போது இவரது பிணை கோரிக்கையை மறுத்த பிரதான நீதவான் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இன்றைய தினம் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க முன்னிலையில் சந்தேக நபர்கள் நால்வரும் ஆஜர் செய்யப்பட்டனர். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரினதும் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த வழக்கு விசாரணை தினத்தன்று நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
0 comments :
Post a Comment