பேரறிவாளன், முருகன், சாந்தன் விடயத்தில் ஜெய லலிதா கைவிரிப்பு.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பதால் அதில் தலையிடும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா உறிதிபடக் கூறியுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்யலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி அவர் மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். ஒருவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால், அதில் மாநில முதல்வரால் தலையிட முடியாது.
தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ள அந்த மூவரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செங்கொடி மரணம் வருத்தம் தருகிறது
காஞ்சிபுரத்தில் இளம் பெண் செங்கொடி என்பவர் இந்த விவாகரத்திற்காக தீக்குளித்து உயிர் நீத்துள்ளார் என்ற செய்தி எனக்கு வருத்தத்தையும், வேதனையயும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற தீக்குளிப்பு செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத்தெரிவித்துள்ளார் ஜெயலலிதா
கபட நாடகம் ஆடுகிறார் கருணாநிதி ஜெ., தாக்கு:
ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேர் பிரச்னையை அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசு அமைச்சரவையை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது .இதில் நளினி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருப்பதால் இவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம், ஏனைய 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்யலாம் என்றும், தீர்மானம் நிறைவேற்றி கடிதம் ஒன்றை கவர்னருக்கு எழுதியது. பின்னர் கவர்னர் அந்த கடிதத்தை ஏப்ரல் 28 ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. மத்தியஅரசும் ஜனாதிபதியும் கருணை மனுவை 2011 ஆக., 12 ம் தேதி நிராகரித்து விட்டது.
இவ்வாறு மரணத்தண்டனையை உறுதி செய்துவிட்டு, செய்ததையெல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல கருணாநிதி தற்போது காப்பாற்ற கோரிக்கை வைக்கிறார். இதனை பித்தலாட்டம், கபட நாடகம், இரட்டை வேடம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? எனக்கு ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது போல அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, ஜனாதிபதி கருணை மனு நிராகரித்த பின்னர் முதல்வராக எனக்கு இதில் குறுக்கிட எந்தவித அதிகாரமும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தி.மு.க., ம.தி.மு.க,. பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 3 பேரை காப்பாற்ற வேண்டும் என கோரி வந்த நிலையில் முதல்வர் அறிவிப்பின் மூலம் தூக்கு நிறைவேற்றுவதில் எதுவும் பிரச்னை இருக்காது என தெரிகிறது.தி.மு.க., தலைவர் கருணாநிதி காங். தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி காப்பாற்ற கோரியுள்ளார். ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ இந்த விஷயத்திற்காக முதல்வரை சந்திக்க தயங்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment