தமிழர்கள் போராட வேண்டும் என்கிறது ஜேவிபி.
அரசாங்கத்தையும், கூட்டமைப்பையும் நம்பி எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. எனவே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழிகளில் போராட வேண்டும் என தெரிவிக்கும் ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் நாட்களில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இலங்கைக்கு எதிரான தலையீடுகளும் அழுத்தம்களும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பல நடிப்புக்களை முடித்து இறுதியாக மர்ம மனிதர்களை காட்டி அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் குட்டிச்சுவராக்கியுள்ளது. அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றுக்கொண்டேயிருந்தன. இதுவரை காலமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும் சர்வதேச நாடுகளுக்கு காட்டிக்கொள்வதற்காகவும் மாத்திரமே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தற்போது பேச்சுவார்த்தைகள்
முறிவடைந்துள்ளன.
இது சற்று எச்சரிக்கையான விடயமாகும். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்பமாகும்.
பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பவே அரசாங்கம் முற்படுகின்றது. இதில் ஒன்றுதான் மர்ம மனிதர்களின் நடிப்புமாகும். கே.பி.யை பிடித்தவர்களுக்கு உள்ளுரில் நடமாடும் மர்ம மனிதர்களை பிடிக்க முடியாமல் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment