Wednesday, August 10, 2011

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்மக்களை அவநம்பிக்கை கொள்ளவேண்டாம் என்கிறார் பசில்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் அரசின் செயற்பாட்டில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் அவநம்பிக்கை கொள்ளவேண்டாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக வெகுவிரைவில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச­ இன்று அவரது அமைச்சில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றும்போது கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ 2005 இல் ஜனாதிபதியானதும் புலிகளுடன் பேச்சைத் தொடங்கினார். ஆனால் பேச்சுக்கு ஒஸ்லோ சென்ற புலிகள் அங்கு பேச்சில் இருந்து விலகினர். இருந்தும் ஜனாதிபதி பேச்சின் ஊடாகத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் உறுதியாக நின்றார்.

அனைத்துத் தரப்பினருடனும் பேசினார். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேசினார். அப்போதைய நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கருத்துகளை உள்ளடக்கி தீர்வு யோசனை தயாரிப்பதே இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமானதாக அமையும்.

நிறைவேற்று அதிகாரம்கொண்ட நாடாளுமன்றத்தில் இருந்து அரசியல் தீர்வு வெளிவருவதே பொருத்தமானதாகவும் ஜனநாயகமானதாகவும் அமையும்.

அந்த அடிப்படையில்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது. ஆறு மாதங்களுக்குள் இந்தத் தெரிவுக்குழு தீர்வு யோசனையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

30வருடங்கள் கொண்ட பிரச்சினைக்கு ஆறு மாதங்களுக்குள் தீர்வு காண்பதானது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக நாம் இந்தத் தெரிவுக்குழுவை அமைக்கவில்லை. உருப்படியான தீர்வை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே இதை அமைக்கின்றோம்.

அரசு மேற்கொள்ளும் அரசியல் தீர்வு முயற்சியானது காலத்தை இழுத்தடிப்பதையோ அல்லது தீர்வு யோசனையை இல்லாமல் செய்வதையோ நோக்கமாகக் கொண்டதல்ல. உண்மையான தீர்வை வழங்குவதே எமது நோக்கம். அரசின் இந்தத் தீர்வு யோசனை முயற்சி தொடர்பாகத் தமிழ் மக்கள் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை.

நிச்சயம் அவர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும். புலிகளைத் தோற்கடிக்கவே முடியாது என்று பலர் கூறினர். ஆனால் அவர்களைத் தோற்கடித்தோம். அதேபோலத்தான் அரசியல் தீர்வும் முன்வைக்கப்பட மாட்டாது என்று இப்போது கூறுகின்றனர். ஆனால் அவர்களின் கூற்று நிச்சயம் பொய்யாக்கப்படும். அரசியல் தீர்வை எழுத்துமூலம் மாத்திரம் வழங்கிப் பிரயோசனமில்லை. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதன் நன்மைகளை மக்களால் எட்டமுடியும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com