இலங்கை விவகாரம் ஐ.நா சபையில் விவாதத்துக்கு வந்தால் பதிலளிப்போம். கிருஷ்ணா
இலங்கை தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றி, ஐநா மன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்திய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையில், விவாதத்தின் முடிவில் பதிலளித்த அமைச்சர் கிருஷ்ணா :-
ஐநா அறிக்கை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன, அந்த அறிக்கை ஐநா மன்றத்தின் எந்த அமைப்பிலும் இதுவரை விவாதத்துக்கு வரவில்லை. அது வரும் என்று காத்திருக்கிறோம். வரும்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் தொடர்பில், இலங்கை அரசு நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.
அவசர கால சட்டத்தை விரைவில் நீக்க வேண்டும், அதிஉயர் பாதுகாப்பு வலையங்களை நீக்க வேண்டும் என்று இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கல் உட்பட அமைப்பு சார்ந்த சீர்திருத்த முறைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்று இலங்கை அரசை சம்மதிக்கச் செய்யும் வகையில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்.
ஆனால், இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது என்றார்.
கடந்த ஆண்டு ஐந்து நாட்கள், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ததாக கிருஷ்ணா தெரிவித்தபோது, தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்குச் சென்று பார்த்தீர்களா என்று திமுக உறுப்பினர் சிவா கேள்வி எழுப்பினார், இல்லை என்று பதிலளித்தார் கிருஷ்ணா.
கடந்த 1974-ம் ஆண்டு ஒப்பந்தப்படி, கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்று கிருஷ்ணா குறிப்பிட்டார். அதை மீண்டும் திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய தமிழக உறுப்பினர்கள் பலர் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் சுட்டிக்காட்டினார்கள்.
தமிழக முதல்வர் தொடர்பாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்ள் தொடர்பாகவும், இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment