சீமான் மீது பாய்கின்றது இளைஞர் காங்கிரஸ்.
பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் குற்றவாளிகளாக கணாப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துததையடுத்து சீமான் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் இவர்களுக்கு தயவுகாட்டவேண்டுமென கோஷங்களை எழுப்பும் நிலையில், ராஜீவின் கொலையாளிகள் தூக்கிலிடப்படவேண்டியவர்களெனவும், சீமானின் செயற்பாடுகள் தண்டிக்கத்தக்கது எனவும் தமிழக டிஜீபி யிடம் மனுக்கொடுத்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸினர் பொலிஸார் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் சீமான் மீது பாயவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய ஊடகங்கங்களில் வெளிவந்துள்ளவை வருமாறு.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள், தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுப்பதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து நேற்று காலை கார் மூலம் காந்தி சிலைக்கு வந்தனர்.
அங்கிருந்து ஊர்வலமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனுகொடுக்க புறப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு போலீசார் டி.ஜி.பி.யிடம் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர்.
இதைதொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் தலைமையில் 5 பேர் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிராகவும், தூக்குதண்டனை கைதிகளை ஆதரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ராஜீவ்காந்தி படுகொலை தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பவர்கள் நாளை அப்சல் குருவையும் விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தயங்க மாட்டார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைமையை காரணமாக கொண்டு தமிழகத்தில் புலிகள் ஊடுருவி அதனால் வெடிகுண்டு கலாசாரம் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புலிகளை ஆதரிக்கும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த 2 பேர் பயங்கரமான வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டருடன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தி படுகொலைக்கு காரணமான தூக்குதண்டனை கைதிகளை ஆதரித்து சென்னையில் நாம் தமிழர் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் வழங்கிய அனுமதியை ரத்துசெய்யவேண்டும். பொதுக்கூட்டத்திற்கு தடையும் விதிக்கவேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பதிலடி கொடுப்போம்:யுவராஜ்!
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் சென்னை போலீஸ் டி.ஜி.பி.யிடம், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், ''தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களை இழிவுபடுத்தியும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தோம். சீமான் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று பேசிவருகிறார்கள்.
இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். உடனடியாக அவர்களை தூக்கிலிடவேண்டும். நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட தீர்ப்பை பொதுக்கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம்.
இது பற்றி பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதில் அளித்தார். சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். இதே போக்கு நீடித்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம்.
அதே நேரத்தில் எங்களுக்கு புலிகள்தான் எதிரானவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை குற்றவாளியாக பார்க்கவேண்டும்.
தமிழர்களின் உணர்வுகளை இதில் சேர்க்கவேண்டாம். சீமான் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக அடுத்தகட்டமாக தகுந்த பதில் அடி கொடுப்போம். இளைஞர் காங்கிரசை பொறுத்தவரை அமைதியாக இருக்கமாட்டோம்'' என்று கூறினார்.
அதேநேரம் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட, கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டோக்ரா தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டார்.
இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம் என்று வக்கீல் புகழேந்தி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா அளித்த பேட்டி ஒன்றில்,
ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு கவர்னரிடம் இருந்து வர வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். கவர்னரின் உத்தரவு வந்த 7-வது நாள் தூக்கு தண்டனை வேலூர் ஜெயிலில் வைத்து நிறைவேற்றப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
1 comments :
தூக்கில் போடப்பட வேண்டிய தமிழக புலிப்பினாமிகள் வெளிப்டையாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
பெரிய தலைகளை கைது செய்யவோ அல்லது விசாரிக்கவோ ஒருவராலும் முடிவதில்லை.
மாறாக பணத்திற்காக உதவிகள் செய்த சில்லறைகளை மட்டும் பலவருடங்களாக சிறைகளில் அடைத்து தூக்கு தண்டனையும் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
இந்திய சட்டத்தில் பல ஓட்டைகள் தெரிகிறது.
Post a Comment