இந்தியாவின் தர்மபுரி மாவட்டம் நெருப்பூரில் இறந்ததாக நினைத்து சவக்குழியில் இறக்கியபோது வாலிபர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததுடன் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் அருகே குருக்கலையனூரைச் சேர்ந்தவர் மாது(33). இவர், ஆந்திர மாநிலம் கொட்டாளம் என்னுமிடத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் பணியாற்றி வந்தார்.
வேலையின் போது பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு வந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சில மணி நேர சிகிச்சைக்கு பின் மாது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாதுவின் மனைவி, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இறுதிச்சடங்குகள் செய்வதற்காக மாது உடலை வாகனத்தில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். அங்கு மனைவி மற்றும் உறவினர்கள் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். இறுதி காரியங்கள் முடிந்ததும், உடலை புதைப்பதற்காக சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
சுடுகாட்டில் தோண்டப்பட்டிருந்த குழியில் உடலை இறக்கினர். உறவினர்கள் உடல் மீது மண் தள்ளினர். அப்போது மாதுவின் உடலில் லேசான அசைவு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழிக்குள் இறக்கப்பட்ட மாதுவை வெளியில் எடுத்தனர். உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment