Wednesday, August 31, 2011

நோன்புப் பெருநாளை கொண்டாடுவோருக்கு பிள்ளையான், ஹிஸ்புழ்ழாஹ் வாழ்த்து.

ஈதுல்பிதர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.30 நாட்கள் உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் புனித நோன்பு நோற்ற பின் கொண்டாடப்படும் இப்பண்டிகையானது பல சிறப்பு மிக்கதும் மானிட ஒழுக்கவியலுக்கான தத்துவத்தை தாங்கிய ஓர் சிறப்பு மிக்க பண்டிகையாகும்.

இப்பண்டிகையானது எடுத்தியம்பும் வாழ்வியல் நெறிக்கான தத்துவங்கள் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாத்திரமின்றி உலகின் அனைத்து மாந்தரும் ஒழுக வேண்டிய தத்துவத்தை தாங்கி நிற்கின்றது.

நோன்பு எனும் புனிதமான கடமை மனிதனின் இச்சைகளை தவறான எண்னங்கள் போன்றவற்றில் இருந்து மனித ஆன்மாவை பாதுகாப்பதுடன் மனிதர்களை மனிதன் சமமாக மதிக்கும் இறைவன்முன் அனைவரும் சமமே என்ற அரும் தத்துவத்தை சொல்கின்றது. அதே நேரம் தான் சம்பாதிக்கும் செல்வத்தையும் தூய்மைப்படுத்தி குறிப்பிட்ட அளவு பிறருக்கு தானம் செய்து சமூகரீதியான ஏற்றத்தாழ்வையும் அழிக்கின்றது.

இவ்வாறான அரும் தத்துவம் தாங்கிய நோன்பும் அதனுடன் இணைந்த பண்டிகையும் அது இயம்பும் வழிகாட்டலும் தத்துவமும் ஏனைய 11 மாதங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமானால் ஏற்றத்தாழ்வற்ற, குரோதமற்ற, பிறரின் உரிமை பொருள்களை மதிக்கின்ற ஓர் உன்னத சமூகத்தை பெறலாம்.

எமது நாட்டின் நெருக்கடியான காலகட்டம் மறைந்து சகோதரத்துவம் இறுக்கமடையும் காலப்பகுதியில் அச்சமற்ற சூழ்நிலையில் கொண்டாடப்படும் இப் பெருநாள் பண்டிகையானது அதன் தத்துவங்களுக்கும் நீதிகளுக்கும் ஏற்ப அனுஸ்டிக்கப்படுமானால் இஸ்லாமிய சமூகம் மாத்திரமின்றி முழு நாடும் அன்பும் சமாதானமும் நிறைந்த தேசமாக மாறும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் இச்சிறப்பு மிக்க தினத்தில் இப் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.


சி.சந்திரகாந்தன்
முதலமைச்சர்
கிழக்கு மாகாணம்.

மட்டக்களப்பு மாவட்ட பா.உ பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வின் நோன்புப் பெருநாள் வாழ்த்து..

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

ஏகநாயன் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, புனித ரமழான் மாதத்தில் எம்மீது விதியாக்கப்பட்ட அனைத்து நோன்பினையும் நோற்றுவிட்டு இன்று இனிய பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறுதியாக தனது உம்மத்துக்காக இரண்டு விடயங்களை விட்டுச் சென்றார்கள். ஒன்று இறைவனின் திருமறையான 'அல்குர்ஆன்' அடுத்தது நபிகளாரின் வாழ்க்கை முறை.

இவை இரண்டையும் எவர் ஒருவர் பின்பற்றி வாழ்கின்றாரோ அவர் நிச்சயம் வழி தவறமாட்டார் என நபிகளார் நவின்றுள்ளார்கள். எமது சமூகம் இவை இரண்டையும் பின்பற்றி நடக்காத போதுதான் பல சோதனைகளும் வேதனைகளும் எம்மை சந்திக்கின்றன. நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்வோமேயானால் நாம் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

ஆகவே, நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நன்னாளில் அனைத்து சமூகத்தையும் கண்ணியப்படுத்தி ஒற்றுமையுடனும், சந்தோஷமாகவும், எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்ட வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு, இப்புனித பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

'குல்ல ஆமின் வஅன்தும் பிஹைர்'

அன்புடன்..
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பா.உ.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com