வெளிநாட்டு அமைப்புக்கள் சில புலிகளை வலுப்பெறச் செய்ய முயற்சிக்கின்றன. பிரதமர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்துள்ளபோதிலும், சில வெளிநாட்டுப் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளை வலுப்பெறச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குளோபல் தமிழ் அரங்கம், பிரித்தானிய தமிழ் அரங்கம், தமிழ்த் தேசிய பேரவை உள்ளிட்ட அமைப்புக்களே இதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தேசிய பாதுகாப்புச்சபையின் ஆலோசனையுடன் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி அவசரகாலச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தியதற்கான காரணம் பற்றிய தகவல்களை அவர் நாடாளுமன்றத்தில் வழங்கினார்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இருப்பினும் கொழும்பில் முக்கியமான இடங்களை பாதுகாக்க அவசரகாலச் சட்டம் இப்போதும் பயன்படுத்தப்படுகின்றதென குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிப்பதற்கு தமிழகத்திலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாகவும் பிரதமர் டி.எம்.ரட்னநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment