Tuesday, August 16, 2011

சனல் 4 விற்கு பதிலளிக்கக்கூடிய ஒரே தலைவர் சரத் பொன்சேகாவே. பா. உ அரஜுன ரணதுங்க

செனல்-4 நிகழ்ச்சித் தொடர்பாக சரியான பதிலை சர்வதேசத்துக்கு வழங்கக் கூடியவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாதான். அவரை சிறையில் வைத்து விட்டு யார் யாரோ எல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் எங்குமில்லாத ஒழுக்கமுள்ள ராணுவமே தனக்கு இருந்ததாக சரத் பொன்சேகா என்னிடம் தெரிவித்துள்ளார் என ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.

செனல்-4 நிகழ்ச்சித் தொடர்பாக அதில் உள்ளவை உண்மையானவை என்று எந்தவொரு எதிர்கட்சி உறுப்பினரும் வெளிநாடுகளுக்கு போய் கூறியது கிடையாது என்றும் அரஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.

'தெரண' தொலைக் காட்சி சேவையில் நேற்று 15-8-2011 அன்று இரவு இடம் பெற்ற '360 பாகை' என்ற நேரடி பேட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , நாட்டுக்கு பொது எதிர் கட்சி ஒன்று அவசியம். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி , மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு என்பன ஒன்று சேர வேண்டும். நாங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க அறிவிப்பாளர் மற்றும் நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கையில் கூறியதாவது, அரசாங்கத்திற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச , கரு ஜயசூரிய, சோமவன்ச அமரசிங்க, சரத்பொன்சேகா ஆகிய எல்லோரும் ஒன்று சேர்ந்து பொது எதிர் கட்சி ஒன்றை அமைக்க வேண்டும். நாங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக நான் முதன் முதலாக ஊடகமொன்றுக்குத் தெரிவிக்கிறேன் என்று நினைக்கறேன்.

இன்று எமது கட்சிக்கு வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர் கட்சியினருக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. தரம் குறைந்த தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரம் குறைந்த சீமெந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இப்போது மர்ம மனிதன் பிரச்சினை. இது போன்றவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

-எம்.இஸட். ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com