இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் இத்தருணத்தில் கச்சதீவினுள் நுழைந்து இந்தியாவின் தேசியக் கொடியினை ஏற்ற முனைந்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து மக்கள் கட்சியின் மாநிலக்குழுத் தலைவர் அண்ணாத்துறை உட்பட்ட உறுப்பினர்கள் படகுதுறையில் படகில் ஏறி கச்சதீவு செல்ல முயற்சித்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் இத்திட்டம் ஏலவே கசிந்ததையடுத்து இவ்விடயத்தினை தடுப்பதற்கு இந்திய காவல்துறையினர் முன்னேற்பாடான விடயங்களை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் இரகசியமாக படகில் செல்ல முயற்சி செய்யலாம் என்று கருதிய பொலிசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர் சங்க பிரதிநிதிகளை அழைத்து இந்து மக்கள் கட்சியினருக்கு படகு வழங்கக்கூடாது என்றும் மீறி வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர்.
இந்த போராட்த்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடையும் விதித்திருந்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
இதேநேரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்களை சுற்றிவளைத்து, அவர்களிடம் இருந்த மீன்களை பறித்து இலங்கை கடற்படையினர் கடலில் வீசியதாக தெரிவித்து ராமேஸ்வரத்தில் பரபரப்பு நிலவுகிறது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவ்வாறு எதுவித சம்பவங்களும் நடைபெறவில்லை எனவும் இலங்கை கடற்படையினர் எப்போதும் இந்திய மீனவர்களுக்கு இடையூறாக செயற்படுவதில்லை எனவும் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசலவர்ணகுலசூர்ய தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் நுழையும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பரப்பினுள் அழைத்து சென்று விட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment