வலுவிழந்தோருக்கான ஒலும்பிக் (Paraolympics) போட்டியில் பதக்கம் வென்ற யாழ் இளைஞன்.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராசா துஷ்யந்தன் என்ற மாணவன் கிறீஸ் நாட்டின் தலைநகர் எதென்ஸில் இடம்பெற்ற Paraolympic எனப்படும் வலுவிழந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி அஞ்சலோட்ட நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத, செவிப்புலனற்ற வலுவிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிறுவர் மனவிருத்திக்கான, சிவபூமி பாடசாலையைச் சேர்ந்த இவர் தனது சாதனையின் மூலம், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்துள்ளார்.
இவரது பாடசாலையும், யாழ் கல்விச் சமூகத்தினரும் இவருக்கு செங்கம்பள வரவேற்பளித்து கௌரவித்துள்ளனர்.
விளையாட்டில் ஆர்வம் மிகுந்த துஷ்யந்தன் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டி முன்னணியில் திகழ்ந்ததையடுத்து, கிறீஸ் நாட்டில் நடைபெற்ற வலுவிழந்தவர்களுக்கான ஒலிம்பிக் போட்டி பற்றி அறிந்து, அதில் அவரைப் பங்கு பெறச் செய்வதற்கான முயற்சிகளை அவரது ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னோடியாக கொழும்பில் நடைபெற்ற தேசிய ரீதியிலான நீளம் பாய்தல், 100 மீற்றர் ஓட்டம், அஞ்சலோட்டம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களைத் தட்டிக்கொண்டதையடுத்து, வலுவிழந்தோருக்கான இலங்கையின் ஒலிம்பிக் குழு இவரை எதென்ஸ் நகரத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரது குழு 4x400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.
இவரது இந்தச் சாதனைக்கு சிவபூமி மனவிருத்தி பாடசாலை ஆசிரியர்களும் யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறையினரும் பெரும் துணை புரிந்ததாக சிவபூமி பாடசாலையை நிறுவியவரும் நிர்வாகியுமாகிய ஆறு. திருமுருகன் கூறினார்.
0 comments :
Post a Comment