Tuesday, July 19, 2011

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் ராணுவம் வாபஸ் பெற வேண்டும்.

சர்வதேச நீதிமன்றம் உத்தரவு.

"தாய்லாந்து, கம்போடியா எல்லையில், பிரிய விகார் கோவிலைச் சுற்றி முகாமிட்டுள்ள இரு நாட்டு ராணுவத்தினரும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, ஐ.நா.,வுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து, கம்போடியா எல்லையில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிய விகார் என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவில், 2008ம் ஆண்டில், உலக பாரம்பரிய கோவிலாக அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து இக்கோவிலை தாய்லாந்தும், கம்போடியாவும் உரிமை கொண்டாடத் துவங்கின. இரு நாடுகளும் போட்டி போட்டு, இரு நாட்டு எல்லைகளில் ராணுவத்தை நிறுத்தி பதட்டத்தை உருவாக்கின.

இதைத் தொடர்ந்து, சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு வீச்சில், மொத்தம் 28 பேர் கொல்லப்பட்டனர். இதனால், எல்லை பகுதிகளில் வசித்து வந்த இரு நாட்டு மக்களும் அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தெற்காசியாவில் பதட்டத்தை ஏற்படுத்திய இப்பிரச்னையை, ஐ.நா.,வுக்கு கம்போடியா எடுத்துச் சென்றது. இக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்றும், அதைச் சுற்றியுள்ள நிலம் தாய்லாந்துக்கு சொந்தம் என்றும், கடந்த 1962ம் ஆண்டில், சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஐ.நா.,வின் சர்வதேச நீதிமன்றத்தில், இதை மேற்கோள் காட்டிய கம்போடியா, கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த சர்வதேச நீதிமன்றம், இரு நாட்டு ராணுவத்தினரையும் சர்ச்சைக்குள்ளான பகுதியில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டது.

மேலும், "ராணுவத்திற்கு கட்டுப்படாத இரு நாட்டு எல்லை பகுதியில் இருந்தும் இரு நாட்டு ராணுவத்தினரும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து கண்காணிக்க, ஐ.நா., பார்வையாளர்கள் அனுப்பப்படுவர்' என்றும் அறிவித்தது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்று, வழக்கை வாபஸ் பெறுவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com