அரசின் வாலைப்பிடித்து பதவியினை பெற்றுக்கொண்டு என்னை பற்றி பேசுகின்றார்களா?
தேர்தலில் நில்லாமல் அரசின்வாலைப் பிடித்து பாராளுமன்றம் சென்றவர்களின் கருத்துக்கள் தொடர்பாக நான் ஒருபோதும் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று முன்தினம் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர், தம்மைக் கடுமையாக விமர்சித்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே விக்ரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
அஸ்வரின் நாடாளுமன்ற ஆயுள்காலமானது அரசைப் போற்றித் துதிபாடும் வரையில்தான். தான் முன்னர் இருந்த கட்சியையே அவர் காட்டிக் கொடுத்தார். அதேபோன்றுதான் தனது இனத்தையும் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இப்படியானவர்கள் நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசுகின்றனர். காட்டிக் கொடுக்கின்றோம் என் றும் குற்றம் சாட்டுகின்றனர். இது கேலிக்கூத்து அல்லவா?
இலங்கையை ஈடு வைத்து, நாட்டு வளங்களை வெள்ளையர்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தே மஹிந்த அரசு அரசியல் பிழைப்பு நடத்துகின்றது. இதுதான் தேசத்துரோகம். அந்தத் தரப்பில்தான் என்னைப் பற்றி சபையில் பேசிய உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றார். எனவே, அவருக்கு அந்தக் குணம் இருக்கத்தான் செய்யும்.
நாம் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள். ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவர்கள். இதனால் எமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருக்கத்தான் செய்யும். அது தொடர்பாக அலட்டிக் கொள்ளமாட்டேன்.ஆனால் அஸ்வரோ அரசுக்கு வால் பிடிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர். அவரது நாடாளுமன்ற ஆயுள்காலமும் அரசைப் போற்றிப்பாடும் வரையில்தான். பாவம் அது அவருக்குத் தெரியாது போலும் என்றார்.
1 comments :
ரொம்ப சரியான கருத்து
ஊருக்கு உபதேசம் சொல்ல முன்னர் உங்களை பாருங்க அன்வர்
Post a Comment