அமெரிக்காவில் பரபரப்பு ஒபாமா கொல்லப்பட்டதாக ட்விட்டரில் ஊடுருவி செய்தி
அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவன ட்விட்டர் கணக்கில் ஊடுருவிய விஷமிகள் சிலர், அதிபர் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் பாக்ஸ் நியூஸ். அதன் சார்பில் உடனுக்குடன் செய்திகளை வெளியிட ட்விட்டர் கணக்கு உள்ளது. அதில் 34,000 உறுப்பினர்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் ஜூலை 4ம் தேதி (நேற்று) தேசிய தினமாக கருதப்படுகிறது.
அந்த நாளில் பாக்ஸ் நியூஸ் ட்விட்டர் கணக்கில் விஷமிகள் சிலர் ஊடுருவினர். ‘’இப்போதைய செய்தி: பராக் ஒபாமா இறந்து விட்டார். அதிபர் உயிருடன் இல்லை. இது சோகமான தேசிய தினம்’’ என்று தகவலை வெளியிட்டனர்.
மற்றொரு தகவலில், ‘‘பராக் ஒபாமா படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 2 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. கொலையாளி யாரென தெரியவில்லை’’ என்றிருந்தது. அமெரிக்க முன்னணி கேபிள் நியூஸ் நெட்வொர்க்குடன் இணைந்த பாக்ஸ் நியூஸ் ட்விட்டர் கணக்கில் வெளியாகும் செய்திகளில் ‘சரிபார்க்கப்பட்டது’ என்ற வார்த்தை இருக்கும்.
அதை மீறி இடம்பெற்ற இந்த விஷம செய்தியால் அமெரிக்கர்கள் அதிர்ந்தனர். இதற்கு பாக்ஸ் நியூஸ் வருத்தம் தெரிவித்தது. அதன் அதிகாரி ஜெப் மிசென்டி கூறுகையில், ‘‘இதுபற்றி விரிவான விசாரணை நடத்த ட்விட்டர் நிர்வாகிகளை கேட்டுள்ளோம். எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
0 comments :
Post a Comment