Wednesday, July 20, 2011

ஜெயலலிதாவுடன் ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு. இலங்கைத் தமிழருக்கு சமஉரிமை வேண்டும்

இந்தியா விற்கு உத்தியோக பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள் பயணமாக சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் சென்னை சென்றடைந்தார். இன்று மாலை கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார்.

முன்னதாக கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள் முன் உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, அமெரிக்க மக்கள் இந்தியாவின் வளர்ச்சியை உற்றுநோக்கி வருகின்றனர். இந்தியா ஜனநாயக கோட்பாடுகளை சரியாக பராமரித்து வருகிறது. ஏழை மக்களின் வாழ்க்கை முறையை உயர்த்த பாடுபட்டு வருகிறது என கூறினார்.

அத்துடன் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், மற்ற இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னையில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழர்கள் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. வாய்ப்பு தேடி அமெரிக்கர்கள் இந்தியாவைத் தேடி வரும் சூழல் வந்துள்ளது.

பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம். உலக அரங்கில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது.

இந்தியா தேர்தல் நடத்துவதில் மிகவும் புகழ் பெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பங்கு மிகப் பெரியது. இதேபோன்று எகிப்து, ஈராக் நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட இந்தியா உதவ வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிகக அதிபர் ஒபாமா ஆதரவாக உள்ளார். உலக அளவில் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் முக்கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்றார்.

No comments:

Post a Comment