Tuesday, July 19, 2011

புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் தொடர்பில் எந்த பாதிப்பு செலுத்தாது!

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் தொடர்பில் பாதிப்பு செலுத்தாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்திய குழுக்கள் உள்ளிட்ட களங்கத்துக்குரிய பட்டியல் விரிவடைந்து செல்வதாக கடந்த வாரம் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் இந்த தீர்மானத்தின்படி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்காக இலங்கையின் பெயர் உள்ளடக்கப்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு, ஐ.நா இல்லை என்று பதிலளித்துள்ளது.

புதிய தீர்மானம், தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நாளான ஜூலை 12 இல் இருந்து மாத்திரம் செயற்படுத்தப்படும். மற்றும் முன்னர் நடைபெற்றதற்கு இந்த தீர்மானம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான ஐ.நா செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி அலுவலகத்தின் தொடர்பாடல் அலுவலகரான டிமோதி லா ரோஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் களங்கத்துக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலிடமும், செயற்குழுவிடமும் கடந்த வாரம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை மற்றும் செயற்குழு என்பன இலங்கையை இந்த பட்டியலில் இணைத்திருந்தன. சிறுவர்களை படைகளில் இணைத்தல் உட்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாகவே இந்த பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்காக வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளிடம் இருந்த சிறுவர் படையினர் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் பிள்ளையான் தரப்பும் தமது சிறுவர் படையை கலைத்து அவர்களை குடுமபங்களுடன் இணைத்துள்ளது.

எனவே இலங்கையை களங்கத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று பாலித கொஹன்ன கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com