Friday, July 1, 2011

யுத்தத்தின் எதிரொலி--வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய்!

ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள்..? இது வவுனியா பஸ் தரிப்பிடத்தில்...
ஒரு இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.

ஆம் தற்போது வடக்கில் விபச்சாரம் அதிகரித்து வருகின்றது.வீடுகள் விடுதிகள் என்று சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்கி வந்த விபச்சாரம் இப்பொழுது நடமாடும் வியாபாரமாக மாறியுள்ளது.

வவுனியாவில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு தொலைபேசி ஊடாக அழைத்தாலே போதும் அழைத்த இடத்திற்கு அழைத்த நேரத்தில் சமூகம் அளிக்கின்றார்களாம்.அதைவிட குறிப்பிட்ட வீதியோரங்களில் சந்திகளில் பஸ்தரிப்பிடங்களில் அவர்களை சந்திக்கமுடியும்.இலகுவில் அடையாளம் காணமுடியாத அளவுக்கு இவர்களின் நடமாட்டம் இருக்கின்றது.அவசர சேவை இலக்கம் எப்படி அனைவரிடமும் இருக்கின்றதோ அதை போன்று இப்பொழுது இவர்களின் தொலைபேசி இலக்கமும் பொதுவாக அனைவரிடமும் இருக்கின்றது.

இவர்களின் தொலைபேசி இலக்கம் எப்படி காம வெறி கொண்டவர்களின் கைகளுக்கு செல்கின்றது என்று இதுவரை தெரியவில்லை.இந்த விபச்சார தொழில் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஆரம்பித்து தற்போது மன்னாரையும் வந்தடைந்துள்ளது.

தற்போது தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் பரவிக்காணப்படுகின்றது.அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலையில் போரின் பாதிப்புக்களால் கணவனை இழந்து, பாசத்துக்குரிய உறவுகளை இழந்து, அரைவயிறுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் வாழ்வில் எந்தவிதப் பற்றும் இல்லாமல் வாழ்பவர்களே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவ்வாறான தொழில்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

பெரும்பாலானோர் வறுமையின் காரணமாகவே விபச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். போர் நடந்து முடிந்த ஒரு தேசத்தில் அங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்ற எதிர்பார்பில் அதன் வீரியத்தை குறைப்பதற்காக அரசானது இவ்;வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்ற பொதுவான குற்றச்சாட்டுக்களையும் மறுப்பதற்கு இல்லை.

அத்துடன் சிங்கள விபச்சாரிகளும் தமிழர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி கொண்டால் மட்டும் போதாது. கொடிய யுத்தத்தில் தமது உறவுகள் அனைத்தினையும் இழந்து ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அலைமோதும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதன் தாக்கமே இவ்வாறான எழிநிலைக்கு காரணமாக உள்ளது.

சட்டத்தினைப் பாதுகாக்க இருக்கும் பாதுகாப்புத்தரப்பில் உள்ள ஒருசிலர் இச்செயற்பாட்டிற்கு பலரும் துனை போவதை அவதானிக்க முடிகின்றது.

(எஸ்.ஆர்.லெம்பேட்)











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com