Wednesday, July 13, 2011

சுவிற்சர்லாந்தில் 22 வது வீரமக்கள் தின நிகழ்வுகள் (வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு)

தமிழ் மக்களின் விடுதலைவேண்டி இடம்பெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தினரால் அனுஷ்டிக்கப்பட்டுவரும் வீரமக்கள் தினம் அவ்வியக்கத்தின் சுவிஸ் கிளையினரால் கடந்த 10.07.2011 ம் திகதி சூரிச் மாநிலத்தில் Affoltern எனுமிடத்தில் இடம்பெற்றது.

மிகவும் உணர்வு பூர்வமாக 22 வது தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கழத்தின் ஐரோப்பிய கிளை உறுப்பினர்கள் சகிதம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி உறுப்பினர்கள் , தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகர்கள், கவுன்ஸ்லர் திரு.போல் சத்தியநேசன் மற்றும் பல முக்கியஸ்தர்ளுடன் பொதுமக்கள் சிறார்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர் திரு. ஜெகநாதன் பேசுகையில், இலங்கையிலே இடம்பெற்ற யுத்தத்தில் அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும் என குரல்கொடுப்பதுகூட இன்று தேசத்துரோகமாக வர்ணிக்கப்படுமொரு துர்பாக்கியநிலை தோண்றிவருவதாக குறிப்பிட்டார் (அவரின் முழு உரை இணைப்பில்)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளையைச் சேர்ந்த திரு. பெர்ணாந்து பேசுகையில், ஒவ்வொரு இயக்கங்களும் தனித்தனியாக இறந்த போராளிகள் பொதுமக்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடாத்திவந்தாலும், மட்டக்களப்பு பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினர் தவிர்ந்த சகல இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பொதுவானதோர் தூபி மட்டக்களப்பில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் (முழு உரை இணைப்பில்)

சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றம் சார்பாக நிகழ்வில் கலந்து கொண்டுபேசிய திரு. ரட்ணகுமார், சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோரின் செயற்பாடுகள் சுவிற்சர்லாந்து தேசிய ஊடகங்கள் உட்பட சகல ஊடகங்களினதும் பார்வையை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மீதும் திருப்பியுள்ளதாகவும், அண்மைய சில நிகழ்வுகள் மீதான அவ்வூடகங்களின் விமர்சனங்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளது எனவும் இதற்கான நிவாரணத்தை தேடிக்கொள்ள தமிழ் மக்கள் மிக விரைவாக செயற்படவேண்டுமெனவும் வேண்டுதல் விடுத்தார். (முழு உரை இணைப்பில்)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையைச் சேர்ந்த திரு. அரவிந்தன் பேசுகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகர் திருவாளர். உமா மகேஸ்வரன் அவர்கள், தமிழ் மக்களுக்காக பலமானதோர் இராணுவக் கட்டமைப்பினை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் திடகாத்திரமாகவிருந்தபோதிலும், இராணுவ நடவடிக்கை என்கின்ற விடயத்தில் மாற்றான் தாய் பிள்ளை மரணித்தால் எனக்கென்ன என்ற போக்கில் செயற்படவில்லை எனவும் அழிவுகளிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்கே அவரிடம் இருந்ததாகவும் புகழுரைத்தார். (முழு உரை இணைப்பில்)



லண்டன் நியுகாம் பிரதேச முன்னாள் பிரதிமேயரும், தற்போதைய கவுண்சிலருமான திரு. போல் சந்தியநேசன் பேசுகையில், எமது உரிமைகளுக்கான போராட்டம் திசைமாறி பல உயிர்களை காவு கொண்டதாகவும், அவ்வாறு எவருக்கும் உயிர்களை பறிக்க உரிமை கிடையாது எனவும் குறிப்பிட்ட அவர், தவறு என்பதை சுட்டிக்காட்ட துணியாதவன் தவறுக்கு துணைபோனவனாக கருதப்படுவான் எனவும் கூறினார். (உரையின் முழுவடிவம் தரவேற்றம்செய்யப்படும்.)

சுவிற்சர்லாந்தில் கடைப்பிடிக்கப்பட்ட 22 வது வீரமக்கள் தின நிகழ்விற்காக அவ்வியக்கத்தின் தலைமைப் பீடத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட செய்தியினை சுவிஸ் கிளையைச் சேர்ந்த திரு. மனோ வாசித்தளித்தார்.

அதன் முழுவடிவம் வருமாறு...

இலங்கையில் தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்காகவும், போராட்டத்தின் பேரிலும் தங்கள் உயிரை ஈகை செய்த அனைத்து அமைப்புகளின் தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகின்றோம்.

இலங்கையில் தமிழ்மக்கள் சகல விடயங்களிலும் ஒதுக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டு, அரசியல், சமூக, பொருளாதார, கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டதும், அதன் காரணமாக, அவர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக பிரித்தானிய ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொட்டே ஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் நடாத்திய போராட்டங்களுக்கு தமிழ்ப் பகுதிகளிலும், சர்வதேசத்திலும் தொடர்ச்சியாக கிடைத்து வந்த அங்கீகாரமும் எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத விடயங்களாகும்.

மூன்று தசாப்தகால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு தீர்வுதர முன்வராத சிங்கள அரசியல் தலைவர்களின் தொடர்சியான இன ஒடுக்கல் நடவடிக்கைகள் காரணமாகவும், அரச பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவுமென முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப் போராட்டம் மூன்று தசாப்த காலங்களின் பின்பு மிகவும் பலவீனமடைந்த நிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று தமிழ்ப் பகுதியெங்கும் யுத்த அழிவுகளின் எச்சங்களே பரந்தும் நிறைந்தும் காணப்படுகிறது. ஒரு இராணுவ ஆக்கிரமிப்பின் முழுமையான தரிசனத்தை எம்மால் உணரமுடிகிறது. நியாயமும், தேவையும், பலமும், பலவீனங்களும் நிறைந்த ஒரு போராட்டத்தின் வரலாறு திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலையையே காணக்கூடியதாக உள்ளது.

நல்லிணக்கம், மீள்எழுச்சி என்ற கோஷங்களின் பின்னணியில் சிறீலங்கா அரசு தமிழ்ப் பகுதிகளில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள், யுத்தத்தின் கொடுமைகளால் அனைத்தையும் இழந்து நிற்கும் கணிசமானளவு தமிழ் மக்களின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் புதிய பரிமாணத்துக்குள் அவர்களை இழுத்துச் சென்று உரிமைப் போராட்டத்தின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்து பலவீனப்படுத்தி விடுமோ என்கின்ற அச்ச உணர்வு மேலெழுந்து வருகிறது. அதே நேரத்தில் நியாயமான காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட உன்னதமான தியாகங்கள் நிறைந்த தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒன்று எமது தேசத்தில் நடைபெற்றதா என்று எமது எதிர்கால சந்ததியினர் கேட்டு ஆச்சரியப்படக்கூடிய வகையிலேயே எமது தமிழர் பகுதிகள் உருமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

அதன் ஒருவகைச் செயற்பாடுதான், நாம் எமது உறவுகளுக்காக, எம்முடன் ஒன்றாயிருந்த தோழர்களுக்காக, எமது தலைவர்களுக்காக ஒரு நிமிட நேரத்தைக்கூட உணர்வு ரீதியாக ஒதுக்குவதற்கு எமக்கு ஏற்படுத்தப்படும் தடைகள் என்று உணரமுடிகிறது. இவ்வாறான, மனித விழுமியங்களுக்கு முரணான செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் வலியின் தாக்கம் தமிழ்ப் பகுதிகளில் இன்று பரவலாக உணரப்பட்டாலும் கூட, புலிகள் அமைப்பைத் தவிர ஏனைய போராளிகள் அமைப்பினரால் நீண்ட காலமாகவே உணரப்பட்டிருந்தது.

புலிகளின் தவறான அரசியல் சித்தாந்தமும், வெறும் ஆயுதம்மீது வைத்திருந்த நம்பிக்கையும், ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாட்டால் ஏறத்தாழ முழு தமிழ் அரசியல் தலைமைகளையும் அழித்தொழித்த செயற்பாடுகளும் புலிகள் சிறீலங்கா அரசினால் முற்றாக தோற்கடிக்கப்பட்டபோது பேரினவாதமும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அடக்கிவிட வேண்டுமென திட்டமிட்ட அனைத்து சக்திகளும் வெற்றிபெற்றுக் கொண்டன. ஆனால் எமது மக்களோ, அரசியல் அநாதைகளாக அடுத்தநேர உணவுக்காக கையேந்தும் ஏதிலிகளாக, கேட்பாரும், பார்ப்பாரும் இல்லாத கையறுநிலை சமூகமாக மாற்றப்பட்டனர்.

தமிழர் சமூகத்தின் பல்வேறு வர்க்கப் பிரிவுகளில் இருந்தும் வந்து இணைந்து, தம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகளை முன்னெடுத்த தலைமைகளின்கீழ் போராடிய பல ஆயிரம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட நேரங்களில் எல்லாம் அவர்களின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் தங்கள் நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்த சக போராளிகளும், அவர்களது உறவினர்களும், அனுபவித்த அவலங்களும், அவமானங்களும், இயலாமை நிலைமையும் இன்று ஒட்டுமொத்தமாக தமிழர் தேசத்தினால் அனுபவிக்கப்படுகின்றது. இருந்தும் தமிழ்ப் பகுதிகளிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் தேசங்களிலும் எமது நினைவிருத்தல் நிகழ்வுகளை “வீரமக்கள் தினமாக” பல தடைகளையும் மீறி தொடர்ச்சியாக செயற்படுத்தி வந்திருக்கின்றோம். எமது அமைப்பின் தோழர்களுக்காக மட்டுமன்றி போரின் காரணமாகவும், போராட்டத்திற்காகவும், படுகொலைகளாலும் மரணித்த அனைத்து அமைப்பின் உறுப்பினர்களையும் பொதுமக்களையும் இணைத்தே எமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றோம்.

வீரமக்கள் தினத்தினை நினைவு கூருவதன் ஊடாக தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தியாக அத்தியாயங்கள் திரும்பிப் பார்க்கப்படுகின்றன. அத்துடன் இந்நிகழ்வு எமது முன்னோடிகளும், சகாக்களும் தம்மை அர்ப்பணித்த உயரிய கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஆத்ம பலத்தை எமக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எமது உரிமைப் போராட்டத்தில் நிரவிக் காணப்பட வேண்டிய ஜனநாயக பண்புகளுக்காக கடுமையாக உழைக்கவேண்டிய கடமையை எமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

எமது வீரமக்கள் தின செயற்பாடுகளில் எமது சர்வதேச அமைப்பினரின், குறிப்பாக சுவிஸ் கிளையினரின், பங்களிப்பு என்றென்றும் பெறுமதி மிக்கவையாகும். அவர்களுடன் ஒத்துழைத்து செயற்படும் சக போராளி அமைப்பு உறுப்பினர்களின் செயற்பாடுகள்மீது நாம் மதிப்பு கொண்டிருக்கின்றோம். எமக்காகவும், எமது எதிர்காலத்திற்காகவும், எதிர்கால தலைமுறையினருக்காகவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களை நினைவிருத்திக் கொள்வதன்மூலம், எமது இனத்தின் கடந்தகால போராட்டத்தின் நியாயமான காரணங்களையும், போராட்டத்தின்போது காணப்பட்ட பலம், பலவீனமான போக்குகளையும், எமது சமூகத்திற்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் தெளிவாக எடுத்துச்சொல்ல முடிகிறது. இன்று எமது பிரதான கடமையும் அதுவாகத்தான் உள்ளது. ஏனெனில். தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசியல் தலைமைகளின் இன ஒடுக்கல் செயற்பாடுகள் பலம்பெற்று வருவதையே காண்கிறோம்.

எமது அடிப்படையான உரிமைகளை அங்கீகரிக்க சிங்கள அரசுகள் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. அனைவரும் சமம், அனைவரும் இலங்கையர் என்கின்ற அலங்காரமான பேச்சுக்களின் நிழலில் போரின் அவலங்களை மறைத்து, எமது இனத்தின் சம உரிமைகளை மறுத்து இலங்கையில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனம் என்ற மன ஓட்டத்தை வளர்த்தெடுக்கிறது.

எனவே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக மரணித்தவர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அதேவேளை தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடிய வகையிலான ஜனநாயக செயற்பாடுகளை ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதுதான் அவர்களுக்கு நாம் அனைவரும் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.


“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”
ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடிவு என்றும் எமக்கில்லை.






























0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com