Sunday, June 12, 2011

சுதந்திர வர்த்தக வலய வேலைநிறுத்தங்கள்: வர்க்க போராட்டத்தின் ஒரு முன்னறிவிப்பு. Peter Symonds

இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள் தீவிலும், சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தின் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த தீவில் நிகழ்ந்துவரும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல், எதிர்கட்சி கட்சிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியே வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 24இல் ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுவதற்கு அழைப்புவிடுத்த தொழிற்சங்கங்களின் தீர்மானத்தை புறக்கணித்து, கூலி-வெட்டு ஓய்வூதிய திட்டத்தைத் திணிக்கும் அரசாங்க திட்டங்களால் தூண்டிவிடப்பட்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை நிறுத்தினர். ஒரு வாரத்திற்குப் பின்னர், அரசாங்கம் அப்பகுதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பொலிஸைக் கொண்டு வந்து நிரப்பியது. ஆனால் போராடிய தொழிலாளர்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறை தாக்குதல்கள், சுதந்திர வர்த்தக வலயம் முழுவதிலும் இருந்து 40,000 தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்ய தூண்டிவிட்டது.

அதிர்ச்சியடைந்த அரசாங்கம், ஓய்வூதிய சட்டமசோதாவைக் கொண்டு வருவதை நிறுத்திக் கொண்டு, ரோஷென் சனாக்கா ரட்னசேகர எனும் இளைஞரை பலியாக்கிய வன்முறைக்கு பொலிஸைப் பலிக்கடாவாக்கியது. ஒரு துப்பாக்கி தோட்டாவால் காயப்பட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த அவருக்கு பொலிஸ் நிலையத்தில் பல மணிநேரங்கள் சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டதால் கடந்த புதனன்று உயிரிழந்தார்.

இலங்கையில் வெடித்திருக்கும் போராட்டங்கள், மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, அத்துடன் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் எழுந்த எழுச்சிகளுக்கு இட்டுச் சென்ற சர்வதேச வர்க்க போராட்ட எழுச்சியின் ஒரு பாகமாக உள்ளது. தொடர்ந்துகொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியே இதன் உந்துசக்தியாக உள்ளது. அது எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்கள் உட்பட அடிப்படை பண்டங்களின் விலைவாசி உயர்வு காரணமாகவும், சிக்கன வெட்டுக்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமாகவும், வாழ்க்கை தரங்களை நம்பமுடியாத அளவிற்கு மோசமடைய இட்டு சென்றுள்ளது.

வறுமை மட்டத்தில் வைத்திருக்கும் கூலிகள், நிலைமைகள் தொடர்பாக ஜவுளித்துறை தொழிலாளர்கள் கசப்பான போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். எகிப்தில் இவ்வாண்டின் புரட்சிகர எழுச்சிக்கு இட்டுச்சென்ற கிளர்ச்சிகளின் பாகமாக ஜவுளித்துறை தொழிலாளர்கள் 2007இல் இருந்து கூலி-வெட்டுக்கள், வேலைவிடுப்புகள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக நடாத்திய போராட்டங்கள் இருந்தன. கடந்த செப்டம்பரில், கம்போடியாவில் 200,000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பணவீக்கத்தை ஈடுகட்ட கூலி உயர்வு கோரி நான்கு நாட்கள் வேலைகளை நிறுத்தினர். டிசம்பரில் ஆயிரக்கணக்கான பங்களதேஷ் ஜவுளித்துறை தொழிலாளர்கள் அவர்களின் சம்பளங்களை இரட்டிப்பாக்க கோரி வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட போது, பங்களதேஷ் பொலிஸ் நடத்திய மூர்க்கத்தனமான சண்டையில் நான்கு தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொழில் வழங்குனர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் தொழிலாளர்களின் முதுகுக்கு பின்னால் வியாபாரம் பேசிமுடித்த உடன்படிக்கைகளைத் திணித்த தொழிற்சங்கங்களே இந்த அனைத்து போராட்டங்களிலும் முக்கிய தடையாக இருந்துள்ளன. தொழிற்சங்கங்களின் முந்திக்கொள்ளும் இந்த தலையீடானது, தங்களது நாடுகளில் "சர்வதேச போட்டி திறனை" தக்க வைப்பதற்காக தொழிலாளர்களை விலையாக கொடுத்து தொழிற்சாலைகளில் அடிமை உழைப்பு வாங்குவதையே முன்நிலைப்படுத்துகிறது.

முக்கியமாக பெண்களைக் கொண்ட, இலங்கையில் இளம் தொழிலாளர்களின் இந்த போராட்டங்கள் இதேபோன்ற செயல்முறையால் உந்தப்பட்டுள்ளது. நாட்டை அடமானமாக வைத்து பில்லியன் கணக்கான டாலர்களை இராணுவத்திற்கும், தீவின் உள்நாட்டு யுத்தத்திற்கும் வீணடித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அரசாங்க செலவுகளைக் குறைக்கவும், சந்தை-சார்பு மறுகட்டமைப்பை நடைமுறைப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தால் நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்.

ஓய்வூதிய திட்டத்தின் முக்கிய நோக்கமே, பங்குச்சந்தையையும், தனியார் முதலீட்டையும் ஊக்குவிப்பதாகும். சராசரியாக ஐந்து ஆண்டுகளாக வேலை செய்துவரும் பெரும்பாலான சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு நீண்டகால நலன்கள் மறுக்கப்படுகின்றது. அதேவேளை அவர்களின் கூலிகள் மற்றும் வேலையிலிருந்து வெளியேறுகையில் கிடைக்கும் தொகைகள் மூலமாக அந்த திட்டத்திற்கு அவர்கள் நிதி அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இளம் தொழிலாளர்கள், கூடுதல் வேலைநேரம் உட்பட சுமார் 12,000 முதல் 15,000 வரையிலான ($US110-135) ஒரு மாத கூலிக்காக நீண்ட வேலைநேரம் மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகளுக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதது.

மே 23இல் இருந்து நடந்துவரும் போராட்டங்கள், சமூக பதட்டங்கள் அரசாங்களோடு மட்டுமின்றி தொழிற்சங்கங்களோடும் கூட உடையும் புள்ளியை எட்டியிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. கடந்த வாரம் Island இதழில் வெளியான ஒரு தலையங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் இராஜபக்ஷ அரசாங்கம் “PSPSஐ [ஓய்வூதிய திட்டம்] தொழிலாளர்களின் தொண்டையில் திணிக்க முடியும்" என்று நம்பியது, ஆனால் "பிரமாண்டமான பாய்ச்சல் ஒரு வெட்ககேடான மடத்தனத்தில் போய் முடிந்தது" என கூர்மையாக அவதானித்தது.

அந்த தலையங்கம் குறிப்பிட்டதாவது: “தொழிலாளர்களின் எதிர்ப்புகளை ஒட்டி, PSPS நிறுத்தி வைக்கப்பட்டது அர்த்தமற்றதாக இருந்தபோதினும், அரசாங்கம் நாடாளுமன்றத்தின் வழியாக மரியாதையற்ற அவசரத்துடன் ஓய்வூதிய சட்டமசோதைவை நிறைவேற்ற விரைந்தது. தொழிற்சங்கங்களையும், எதிர்கட்சிகளையும் அழைத்து அந்த முக்கிய பிரச்சினையின் மீது விவாதிப்பதற்கு பதிலாக, அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொரு கணத்திலும் திமிர்த்தனத்தோடு, நடப்பது நடக்கட்டும் என மதிப்பற்ற வார்த்தைஜாலங்களை முழங்கி ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கங்கணங்கட்டினர். (பாவம்! அவர்கள் மூக்குடைப்பட்டது தான் மிச்சம்!) ”

Island இதழ் தொழிலாளர்கள் உரிமைகளின் பாதுகாவலன் அல்ல. ஆனால் முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுகொடுப்பதில் தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன என்பதை அது நீண்டகால அனுபவத்தில் உணர்ந்திருந்தது. தொழிற்சங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, தீவின் வெடிப்புமிக்க சமூக சூழலில், ஒரு பரந்த எதிரெழுச்சியை பற்ற வைக்கக்கூடிய ஜவுளித்துறை தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சிக்கு இராஜபக்ஷ கதவைத் திறந்து விட்டுள்ளார். இருபத்தைந்து ஆண்டுகால யுத்தத்தினாலான கையறுநிலையின் பின்னர், அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்துகிறது. 2009இல் சண்டை முடிவுக்கு வந்ததில் இருந்து, விலைவாசி உயர்வுகளுக்கு மத்தியிலும் கூலி உயர்வை முடக்கி வைப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக சிறிய போராட்டங்களை நடத்துவதன் மூலமும் இறுதிவரை போராட்டம் என்று நம்பிக்கை அளிப்பதன் மூலமும் தங்களது வாக்குறுதிகளை முறிப்பதில் இறங்குகின்றனர். போர்குணமிக்க வாய்ஜம்பங்களுக்கு மத்தியில், சட்டமசோதாவை கைவிடுவதில் இருந்து வெகுதூரத்தில் விலகி அதை திருத்தப்பட்ட வடிவத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக கங்கணங்கட்டி நிற்கும் அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றன. சர்வதேச நிதியியல் மூலதனத்திற்கு சார்பாக செயல்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியம் அதன் முறையீடுகளுக்கு எதிராக வரும் எந்த எதிர்ப்பையும் ஜீரணித்துக் கொள்ளாது என்பதை அரசாங்கம், எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்புகளும் நன்கு அறிந்துள்ளன.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்புகளை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர தவறுமேயாயின், ஓர் ஒடுக்குமுறைக்கு இராணுவம் தயாராக உள்ளது. மறைந்த FTZ தொழிலாளி ரட்னசேகரவின் சனியன்று நடந்த இறுதிசடங்கின் போது சிப்பாய்கள் செயலில் இறங்கி இருந்தனர். தேவாலயத்தைச் சுற்றி வளைத்திருந்த அவர்கள், துக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களை ஒன்றுகூடாமல் தடுப்பதிலும், இறுதிச்சடங்கு உரைகளுக்குத் தடைவிதித்திருந்த ஒரு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தனர். அத்தீவின் வகுப்புவாத யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்திருக்கும் இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிங்கள, தமிழ் என்ற வேறுபாடின்றி அதேபோன்ற முறைகளைப் பயன்படுத்த தயங்காது.

இந்த அனுபவங்கள் இலங்கையிலும், சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கு முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளன. தொழிற்சங்கங்களின் கவசங்களில் இருந்து உடைத்துக் கொள்ளாமல், உழைக்கும் மக்கள் அதன் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒருபடி கூட முன்னேற முடியாது. ஆனால் இவ்வாறு செய்யும் போது, அவர்கள் அரசாங்கம் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு எதிராக, எகிப்தில் நடந்ததைப் போலவே, புரட்சிகர பணிகளை முன்னிறுத்தும் ஓர் அரசியல் போராட்டத்தை உடனடியாக முகங்கொடுக்க வேண்டியதிருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு அவர்களை சுரண்டுபவர்கள், வெறும் உள்ளூர் நிறுவனங்கள் அல்ல மாறாக எங்கே வேண்டுமானாலும் எளிதில் தங்கள் வியாபாரத்தை மாற்றி கொள்ளும் பாரிய சர்வதேச பெருநிறுவனங்களே ஆகும் என்பது துல்லியமாக தெரிந்திருக்கின்றது. கூலிகள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான எந்த போராட்டமும், அது இலங்கையில் ஆகட்டும், அல்லது பங்களதேஷ், சீனா, எகிப்து அல்லது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஆகட்டும், சர்வதேச தொழிலாளர்களை நோக்கி ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தங்களது பொதுவான வர்க்க நலன்களுக்காக போராடத் திரும்புவது அவசியமாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு குறைவாக வேறெதுவும், நாடுகடந்த கூட்டு நிறுவனங்களுக்கு பெரும் இலாபங்களை உருவாக்கி கொடுத்து கொண்டு, ஒருமணி நேரத்திற்கு $1 குறைவாக இளம் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களை அரை அடிமைகளாக்கி இருக்கும் இந்த சமூக அமைப்புமுறையை முடிவுக்கு கொண்டு வந்துவிடாது. இத்தகையவொரு போராட்டத்தை நடத்த வேண்டுமானால், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய பரந்த புரட்சிகர கட்சிகள் தேவைப்படுகின்றன. அதாவது இலங்கையில், சோசலிச சமத்துவ கட்சியில் இணைவது மற்றும் அதை கட்டியெழுப்புவது என்பதை இது குறிக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com