இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களை பாதுகாத்திடு. By the International Students for Social Equality
இலங்கையில் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பு, நியாயமான சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றமான நிலைமைகளுக்காகப் போராடுவதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாத்திடுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
சம்பள உயர்வுக்கான தமது பிரச்சாரத்தின் பாகமாக, துறைசார் தலைவர்கள், பீட இணைப்பாளர்கள், தங்குமிட அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் என்ற தமது நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்தும் பல்கலைக்கழக கல்விமான்கள் மே 9 அன்று விலகிக்கொண்டனர்.
ருஹுனு, ஸ்ரீ ஜயவர்தனபுற மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் உள்ள சில அரசாங்க-சார்பு மாணவர்கள், வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்ததை அடுத்து, மே 30 அன்று கல்விமான்களின் இராஜனாமாவை நிறுத்துமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் ஒரு இடைக்காலத் தடையை விதித்தது. ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு எதிராக இத்தகைய வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜூன் 9 அன்று, மேன் முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடையை விலக்கிக்கொள்ளுமாறு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சமாசம் (FUTA) விடுத்த வேண்டுகோளை அது நிராகரித்தது. பதிலாக, அந்தத் தடையை நீதிமன்றம் ஜூன் 30 வரை நீடித்தது. அந்தக் கட்டளைகளுக்கு ஆசிரியர்கள் அடிபணியாவிட்டால், மற்றும் நிர்வாகக் கடைமைகளை மேற்கொள்ள மறுத்தால், அவர்கள் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளக் கூடும்.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளை பயன்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இழிபுகழ்பெற்றதாகும். 2007ல் சம்பள பிரச்சினையின் பாகமாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதை பாடசாலை ஆசிரியர்கள் பகிஷ்கரித்தனர். விடைத்தாள் திருத்தத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என உயர் நீதிமன்றத்திடம் அரசாங்கம் உத்தரவொன்றைப் பெற்றுக்கொண்டது. அந்த அடிப்படையில், திருத்தத்தில் பங்கேற்க மறுத்த பல ஆசிரியர்களை பொலிசார் கைது செய்தனர். வேட்டையாடப்பட்ட ஆசிரியர்களை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் மறுத்த போது, முழு பிரச்சாரமும் தோல்வி கண்டது.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் எதிர்ப்பு, உயர்ந்த பணவீக்கத்தை சமாளிக்க சம்பள உயர்வு கோருவதற்காக ஏனைய தொழிலாளர் தட்டினரை ஊக்குவிக்கும் சாத்தியம் உள்ளது என்பதையிட்டு பீதிகொண்டுள்ள அரசாங்கம் அதை நசுக்குவதற்கு தீர்மானித்துள்ளது.
ஆசியாவில் குறைந்த சம்பளம் பெறுபவர்களில் இலங்கை கல்விமான்களும் அடங்குவர். ஒரு கனிஷ்ட விரிவுரையாளருக்கு 20,750 ரூபா (190 அமெரிக்க டொலர்) மற்றும் பேராசிரியர் ஒருவருக்கு 57,500 ரூபா என்ற குறைந்த மாத சம்பளம் வழங்கப்படுகின்றது. 1996ல் இருந்து அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவே இல்லை. மாத சம்பளத்தில் 200 வீதம் வரையான “தகுதியான சம்பள அதிகரிப்புக்கும்” மற்றும் தரமான கல்விச் செலவிற்கும் FUTA கோரிக்கை விடுத்தது.
கடந்த மூன்று வாரங்களாக, FUTA தலைவர் ரன்சித் தேவசிறி உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள், சம்பள உயர்வு வழங்குவதற்காக ஜனாதிபதி இராஜபக்ஷவையும் சிரேஷ்ட கல்வி அதிகாரிகளையும் நெருக்க முடியும் என்ற அற்ப நம்பிக்கையுடன் அவர்களைச் சந்தித்தனர்.
கடந்த ஜூலையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், அரசாங்கம் ஒரு வேறுபட்ட சுருதியைப் பாடியது. உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கான மாத சம்பளம் 57,755 ரூபாயில் இருந்து 200,000 ரூபா வரையும், மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களுக்கான சம்பளம் 20,750 ரூபாயில் இருந்து 72,000 ரூபா வரை அதிகரிக்கப்படும் என பாராளுமன்றத்தில் கூறினார்.
அரசாங்கத்துக்கு அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் கிடையாது. மாறாக, உயர் கல்வியை தனியார்மயமாக்குவது மற்றும் இலவச பல்கலைக்கழகங்களில் நிலைமைகள் சீரழிந்து வருவதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் இருந்து பிளவுபடுத்துவதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகும்.
பல்கலைக்கழக அதிகாரிகள், அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜனநாயக-விரோத சட்டங்களைப் பயன்படுத்தி வகுப்புக்களை இடை நிறுத்தியதோடு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிய மாணவர்களில் அநேகமானவர்களை கைது செய்துள்ளது. அப்போதிருந்து, மேலும் அரசியல் எதிர்ப்புக்கள் வருவதை நசுக்கும் முயற்சியாக, இராஜபக்ஷ அரசாங்கம் புதிதாக பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு கட்டாய இராணுவ “தலைமைத்துவ பயிற்சியை” திணித்துள்ளது.
மாணவர்கள் போராட்டங்களை அடக்கிய அரசாங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பக்கம் திரும்பி, சம்பளத்தை அதிகரிப்பதாக அது கொடுத்த வாக்குறுதியை மறுக்கின்றது. மாணவர்கள் பொதுக் கல்வியை காப்பாற்றும் பரந்த பிரச்சாரத்தின் பாகமாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான சட்ட ரீதியான தாக்குதலை எதிர்ப்பதோடு நியாயமான சம்பளம் மற்றும் நிலைமைகளைக் கோர வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் போதாத சம்பளம், இலங்கையில் முழு கல்வி முறைமையினதும் நெருக்கடியை வெளிக்காட்டும் ஒரு அறிகுறியாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி-சாரா ஊழியர்களுமாக அனைவரும், பல்கலைக்கழகங்களில் வகுப்பறை இடப்பற்றாக்குறை, வசதிகள் பற்றாக்குறை, உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை போன்ற வறிய நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் சீரழிவானது நாடு பூராவும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு எதிராக தொடுக்கப்படும் பரந்த தாக்குதலின் பாகமாகும். இராஜபக்ஷ அரசாங்கம், பொதுச் சேவைகளை வெட்டித்தள்ளுமாறும் சந்தை-சார்பு மறுகட்டமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நாணய நிதியம் விடுக்கும் கட்டளைகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.
தொழிலாள வர்க்கத்தின் ஏனைய தட்டினரும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த மாத கடைசியில், புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை நசுக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான பொலிசையும் படையினரையும் அணிதிரட்டியது. இந்த ஓய்வூதியத் திட்டமானது முதலீட்டாளர்களுக்கும் ஊக வாணிபம் செய்பவர்களுக்கும் உதவுவதற்காக வரையப்பட்டதாகும்.
உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தக் கோரும் நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் இட்டு நிரப்புகின்றன. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக ஐரோப்பா, அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவையையும், முதலீட்டாளர்கள் இலாபம் பெறும் தொழிற்துறைகளாக மாற்றுவதற்காக அரிவாள் முனையின் மீது வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பச்சைக் கொடி காட்டுவது பற்றி ஏற்கனவே கலந்துரையாடியுள்ளது. ஆசிரியர்களின் பிரச்சாரத்தை தோற்கடித்து, மாணவர்களை நசுக்குவதன் மூலம், அரசாங்கம் துரிதமாக முன்செல்ல முயற்சிக்கின்றது. இது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதனாலேயே, சம்பளப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் அதே வேளை, பொதுக் கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்துப் போராட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு அரசியல் வேலைத்திட்டம் தேவை என ஐ.எஸ்.எஸ்.இ. வலியுறுத்துகிறது.
FUTA தலைவர் தேவசிறி, கடந்த ஞாயிறன்று, அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல் “திருப்தியான தீரவுகள்” இன்றியே முடிவுக்கு வந்தது என்பதை ஏற்றுக்கொண்டார். ஆயினும், ஒரு சமரசத்தை எட்டுவதற்காக அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் பேரில், உயர் தர பரீட்சை மதிப்பீடுகளை பகிஷ்கரிப்பது போன்ற இன்னுமொரு எதிர்ப்புப் போராட்டத்தை பிரேரிப்பதே அவரது பதிலாகும்.
FUTA பிரச்சாரத்தை ஆதரித்து, எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சமாசம் (IUSF) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. FUTA போலவே IUSF இடமும் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் சவால் செய்வதற்கு ஒரு முன்னோக்கு இல்லை. மாறாக, அது தொழிற்சங்கத்தின் எதிர்ப்பு தந்திரோபாயத்துக்கு ஆதரவளிக்கின்றது.
அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க முயற்சிப்பதையே வலியுறுத்தும் அனைவரும், ஆபத்தான மாயையை வளர்க்கின்றனர். பூகோள நிதி சந்தையை திருப்திப்படுத்துவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்துவதைத் தவிர வேறு தேர்வுகள் இராஜபக்ஷவுக்கு இல்லாததோடு, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக பொலிஸ்-அரச நடவடிக்கைகளை பயன்படுத்தத் தயங்கமாட்டார். ஒரு சோசலிச மாற்றீட்டுக்கான எந்தவொரு பரந்த போராட்டத்தையும் தடுப்பதற்கு அவரது அரசாங்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளிலேயே தங்கியிருக்கின்றது.
சோசலிச வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகப் போராடுவதற்கு ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய தட்டினரை நோக்கி மாணவர்களும் ஆசிரியர்களும் திரும்புவது அவசியமாகும். அனைவருக்கும் இலவச, உயர் தரமான கல்வியையும் மற்றும் ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளம் மற்றும் நிலைமைகளை வழங்கவும் பில்லியன் கணக்கான ரூபாய்கள் தேவை.
ஐ.எஸ்.எஸ்.இ. இந்த முன்நோக்குக்காகவே சோசலிச சமத்துவக் கட்சியுடன் சேர்ந்து போராடுகின்றது. நாம் எமது வேலைத் திட்டத்தை கற்குமாறும் எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஐ.எஸ்.எஸ்.இ. கிளைகளை கட்டியெழுப்புமாறும் மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.
0 comments :
Post a Comment