Saturday, June 18, 2011

புலம்பெயர் புலிகளுக்கெதிராக அணிதிரளுமாறு நாட்டுப்பற்றாளர்களுக்கு கோத்தா அழைப்பு

புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரள வேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடமிருந்து கைநழுவிப் போய்விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதிகள் எமது நாட்டைப் பிளவுபடுத்தி அதனை துண்டாட முயற் சிசெய்தனர்.

தற்போது சர்வதேசத்துக்கூடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி களை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரனுக்கு எதிராகப் போராடிய படையினருக்கு எதிரான வீடியோ கசட்டுக்களைத் தயாரித்து சர்வதேசத்திடம் முன்வைத்துள் ளனர்.

படையினரின் வெற்றி இதன்மூலம் மலினப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார். கட்டுநாயக்காவில் இடம் பெற்ற சம்பவங்கள் நேரடியாக ஜேர்மன் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசமெங்கும் எமதுநாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது. எனினும், கிழக்கில் பெளத்த மத தேரர்கள் கொல்லப்பட்டதையோ, நிராயுதபாணியான 600 பொலிஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை செய்ததையோ சனல்-4 காண்பிக்கவில்லை.

இராணுவத்தளபதி அண்மையில் நடத்திய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் மேற்குலக நாடுகள் அதனை நிராகரித்துவிட்டன. அங்கு பயங்கரவாதத்தை ஒழித்த முறை மற்றும் சிக்கல்களுக்கு பதிலளிக்கவும் நாம் தயாராகவிருந்தோம். எனினும், எம்மை குற்றஞ்சாட்டுபவர்கள் அம்மாநாட்டுக்கு சமுகமகளிக்கவில்லை.

அவர்கள் புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு உதவி செய்பவர்கள். இவற்றுக்கு எதிராக மீண்டும் நாம் போராடவேண்டியுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நுகேகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com