யாழ் மாவட்டத்தில் ஈழப்போரின் பக்க விளைவுகள்!
கடந்த காலத்தில் நடைபெற்ற போரின் விளைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்வரும்
நிலைமைகள் காணப்படுவதாக அம்மாவட்டத்தின் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்
அண்மையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு:
* யுத்தம் காரணமாக யாழ் மாவட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் விதவைகள்
ஆக்கப்பட்டுள்ளனர்.
* பயங்கரவாத நடவடிக்கைகளால் பெற்றோரை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 990
ஆகும்.
* போரின் காரணமாக தாய் தந்தையரை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 437 ஆகும்.
* தந்தையை மட்டும் இழந்தவர்களின் எண்ணிக்கை 6321 ஆகும்.
* பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 489 ஆகும்.
* யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2010ல் 251 பதின்ம வயதுச் சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். 2011 ஜனவரி – பெப்ருவரி மாதங்களில் மட்டும் 109 பேர் அவ்வாறு கருத் தரித்துள்ளனர்.
* 163 பேர் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
* தந்தையே தனது சிறுவயது மகளை வன்புணர்ச்சி செய்த முறைப்பாடுகள் சிலவும்
பதிவாகியுள்ளன.
நிச்சயமாக இந்த நிலைமைகள் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற தேவையற்ற
கொடிய யுத்தமொன்றின் பக்க விளைவுகளாகும்.
இந்த நிலைமைகள் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் மேலும் பல மடங்கு அதிகம்
எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அம்மாவட்டங்களில் வாழும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள்தான் கூடுதலாக புலிகளால் பலவந்தமாகத் தமது படையணிகளில்
சேர்க்கப்பட்டு அழிவுக்குள்ளாக்கப்பட்டவர்கள்.
அந்த மக்கள் இந்த அவல நிலையை அடைவதற்கு புலிகள் மட்டுமின்றி, தமது சொந்த
சுயநலத்திற்காக, அவர்களது யுத்த சன்னதத்திற்கு பெருமளவு நிதி கொடுத்து உதவிய
புலம்பெயர் தமிழர்களும் காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
இப்பொழுது அந்த மக்களின் வாழ்க்கையைப் படிப்படியாக சீரமைப்பதற்கு அரசாங்கம்
முயற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அதற்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்களை
மேலும் மேலும் துன்பத்துக்குள் தள்ளிவிடும் செயல்களை புலம்பெயர் புலித்தமிழர்கள்
செய்து வருகின்றனர். அவர்களது இந்தச் செயல்களுக்கு கடந்த காலங்களைப் போல
தெரிந்தோ தெரியாமலே உதவிகள் எதுவும் புரியாது, தம்மை விலக்கி வைத்திருப்பது
தாயகத்தில் வாழும் தமிழ் உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் செய்ய வேண்டிய
தலையாய கடமையாகும்.
0 comments :
Post a Comment