இணைந்த வட-கிழக்கிற்கு அதிகாரத்தினை வழங்குவதன் முலம் தீர்வினை காணமுடியும்.
வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்துக்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும். அதிகாரம் பரவலாக்கப்படாவிட்டால் நாடு பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நவ சமசமாஜக் கட்சியின் செய்தியாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியவை வருமாறு -
அளவெட்டியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதனாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவே விரும்புகின்றது. தமிழ் மக்களுக்கு உரிய தலைமையை வழங்கி ஜனநாயக செயற்பாட்டைக் கூட்டமைப்பு முன்னெடுத்து இன்று தமிழ் மக்களின் குரல் ஒடுக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினர் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தாக்கியது யார்? இராணுவத்தினரே தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்படியாயின் ஆட்சித் தரப்பில் முரண்பாடு உள்ளதா?
இது ஒரு சிறிய சம்பவம். இதை ஏன் அமெரிக்கத் தூதுவரிடம் முறையிடுகின்றனர் என பாதுகாப்புச் செயலர் கேள்வி எழுப்புகின்றார். இவர் முன்னர் யுத்த காலப் பகுதியில் ஈராக்கில் அமெரிக்காவின் செயற்பாட்டை ஆதரித்தார்.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட விதத்தைக் கண்டிக்கின்றார். இவரே அன்று பேரினவாத முகாமின் முதன்மையானவராகக் காணப்படுகின்றார். சனல் – 4 யுத்தக் குற்ற விடியோ இன்று உலகம் முழுவதும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது – என்றார்
0 comments :
Post a Comment