கல்முனையில் யுவதி கடத்தல் முயற்சி முறியடிப்பு: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறுவர் கைது
மட்டக்களப்பு, கல்முனையில் இளம் யுவதி ஒருவரை வானில் வந்த குழுவினர் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தக் கடத்தல் குழுவினரை மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் வான் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய குறித்த யுவதி இன்று காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு ஓட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வானில் வந்த கடத்தல்காரர்கள் ஓட்டோவை வழிமறித்து யுவதியை கடத்த முயற்சித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடிப்பதற்காக போராட்டிய ஓட்டோச் சாரதியை கடத்தல் குழு தாக்கிக் கொண்டிருந்தபோது பிரதேச வாசிகள் திரண்டு வந்து கடத்தல்காரர்களை மடக்கிப்பிடித்தனர்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று கடத்தல்காரர்களான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சோந்த 6 பேரை கைதுசெய்ததுடன், அவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்திய வான் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
அதேவேளை, காயமடைந்த ஓட்டோச் சாரதியும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் தொடர்பான பிரச்சினையாலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment