Friday, June 17, 2011

பின்லாடனுக்கு நடந்த அதேகதியே புதிய தலைவருக்கும் நேரும். அமெரிக்கா எச்சரிக்கை

பின்லேடனை சுட்டுக் கொன்றதைப் போல அல் காய்தாவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரியையும் சுட்டுக் கொல்வோம் என்று அமெரிக்கா சபதமிட்டுள்ளது. பின்லேடன் பாகிஸ்தானின் அபோட்டாபாதில் தங்கியிருந்தபோது அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அல் காய்தா இயக்கமும், அதன் தலைவரும் இன்னும் எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். நிச்சயமாக ஜவாஹரியையும் பின்லேடனைப் போல வீழ்த்துவோம் என அமெரிக்க ராணுவத் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் பென்டகனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்லேடனுக்கு அடுத்து ஜவாஹிரி புதிய தலைவரானதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அது எதிர்பார்க்கப்பட்டதுதான் என முல்லன் கூறினார்.

பாதுகாப்புத்துறைச் செயலர் கேட்ஸ், கடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறும்போது, தற்போதைய சூழ்நிலையில் அல் காய்தாவின் தலைவர் பதவியை ஏற்பதில் எவருக்காவது விருப்பம் இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.

ஜவாஹிரி நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் அவர்.

ஜவாஹிரி எகிப்தியர் என்பதால் அல் காய்தாவுக்குள் சில சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com