Sunday, June 12, 2011

இன‌ப்படுகொலை‌க்கு உட‌ந்தையானவ‌ர் ‌சி‌வ‌ச‌ங்க‌ர் மே‌ன‌ன்: ‌சீமா‌ன் கு‌ற்ற‌ச்சா‌ற்று

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையானவ‌ர் இந்திய அதிகாரி சிவசங்கர் மேனன் எ‌ன்று கூ‌றியு‌ள்ள நாம் தமிழர் கட்சி தலைவ‌ர் சீமான், ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்த விதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வெளியான ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு அதிபர் ராஜபக்சவிடம் இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு வலியுறுத்தியது என்று செய்திகளும் வந்துள்ளன.

ஆனால், இலங்கையில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் வெளியான செய்திகள் வேறு விதமாக உள்ளன. “தமிழர் பிரச்சனைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை காண வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த வித‌த்திலும் தலையிடாது (it is up to the Sri Lankan Government to find a political solution which it is comfortable with and India is not interfering in the matter) என்று சிவசங்கர் மேனன் கூறியதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

“தமிழர்கள் பிரச்சனைக்கு வேகமான தீர்வு வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், தங்களுக்கு உகந்த ஒரு தீர்வை இலங்கை அரசுதான் உருவாக்க வேண்டும்” என்றும் சிவசங்கர் மேனன் விளக்கியுள்ளார் என்று கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை அரசு தனக்கு உகந்த வகையில் முடிவெடுக்கக் கூடியது’ என்று இந்திய அரசு கருதுமானால், அப்பிரச்சனையில் ‘எந்த விதத்திலும் இந்தியா தலையிடாது’ என்பதுதான் அதன் நிலையானால், பிறகு “ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறுவதன் பொருள் என்ன? சிவசங்கர் மேனனின் வார்த்தைகளில் உண்மையான, நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அக்கறை பிரதிபலிக்கவில்லையே?

இதுமட்டுமல்ல, இலங்கை நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் அரசமைப்பிற்கு முரணானது என்று தூக்கி எறியப்பட்ட 13வது திருத்தம் பற்றி சிவசங்கர் மேனன் பேசியுள்ளார். “13வது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைத் தமிழர்களுக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா?” என்று வினாவிற்கு, “13வது அரசமைப்புத் திருத்ததின் அடிப்படையில் தீர்வை உருவாக்குவதாக இலங்கை அரசே கூறியுள்ளது” என்று கூறுகிறார். இது இல்லாத ஊருக்கு வழிகாட்டும் அயோக்கியத்தனம் அல்லவா?

ஈழத் தமிழர் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு இந்தியா ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கோரும் இலங்கை தமிழர் கட்சிகள், அதன் இரட்டை முகத்தை சி்வசங்கர் மேனனின் வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, தமிழக சட்டப் பேரவையில் இலங்கை அரசிற்கு எதிரான போர்க் குற்றம், பொருளாதாரத் தடை ஆகியன குறித்து ராஜபக்சவுடன் விவாதிக்கவில்லை என்றும், தங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மத்திய அரசோடு மட்டுமே உறவு கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசு கூறியதாக சிஙசங்கர் மேனன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆனால் இன்று காலை வெளியான ஆங்கில நாளிதழில் அதன் கொழும்பு பேச்சாளர் விடுத்துள்ள செய்தியில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது, அதன் சட்ட ரீதியான அடிப்படை குறித்து இலங்கை அரசு கேள்வி எழுப்பியது” என்றும், ஆனால் அதற்கு இந்தியக் குழு என்ன பதில் தந்தது என்பதை சி்வசங்கர் மேனன் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கைப் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது இந்தியாவின் நிலைப்பாடு என்று கேட்டதற்கு, “ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனத்திற்கு உட்படுத்த இந்தியா விரும்பவில்லை” என்று பதிலளித்துள்ளார்.

இது மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசு இந்தியா காப்பாற்றும் என்ற நேரடியான பதிலாகும். மேலும், இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் 40,000 பேர் வரை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.அமைப்புகளும், மனித உரிமைக் குழுக்களும் குற்ற‌ம்சாற்றுகின்றனவே, அது குறித்து என்ன கூறுகிறீர்கள் என்ற வினாவிற்கு, “அப்படிப்பட்ட தகவல்களில் உண்மை உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்தலாம்” என்று சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்காலிலும், வட்டுவாகலிலும் நடந்த போரில் பத்தாயிரம் முதல் நாற்பதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஐ.நா.வின் கொழும்புத் தூதரக பேச்சாளராக இருந்த கார்டன் வீஸ் போன்ற நேர்மையான அதிகாரிகள் கூறியிருந்தனர். பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்த ஐ.நா.நிபுணர் குழு பல பத்தாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

ஆனால் இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் அப்படிப்பட்ட தகவல்கள் கேள்விக்கு உட்படுத்தக்கூடியவை என்று கூறியதிலிருந்து, தமிழினப் படுகொலை பற்றிய உண்மையை இந்தியா புதைக்க முயற்சிப்பதும், தன்னை காப்பாற்றிக்கொள்ள அது இலங்கை அரசின் பக்கமே நிற்கும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

தன்னைச் சந்தித்துப் பேசிவிட்டு கொழும்பு சென்ற சிவசங்கர் மேனன் எப்படிப்பட்ட நபர் என்பதை அவர் வெளிப்பட்டுத்திய வார்த்தைகளில் இருந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையான இந்திய அதிகாரி சிவசங்கர் மேனன் என்பதையும், ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்த விதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது என்பதையும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னெடுக்க மத்திய அரசு ஒருபோதும் முன்வராது என்பதையும் தமிழக முதலமை‌ச்சரும், தமிழர்களும் புரிந்துகொள்ள வேண்டும்'' எ‌ன்று ‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com