Wednesday, June 15, 2011

சவுதி எஜமானர்களின் தாக்குதலால் கண்களை இழந்து வந்த வாகரைப் பெண்!

சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற வாகரையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு எஜமானால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கண்களின் பார்வையிழந்து உடலின் பல்வேறு உறுப்புக்கள் செயலிழந்து பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

இவர் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வைத்து உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டார்.

மட்டக்களப்பு வாகரை மத்தி கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 31 வயதான மனோகரன் பவானி என்பவரே இவ்வாறு அங்கவீனராக வீடு திரும்பியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தயாரான இவர், குடும்ப வறுமை காரனமாக 2003.06.01 ஆம் திகதி சவூதி அரேபியவின் தமாம் பிரதேசத்தின் பரிதா எனுமிடத்தில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சென்றார்.

சுமார் 2 வருடங்கள் கடந்தும் சம்பள பணம் தர மறுத்த எஜமானிடம் சம்பளப் பணம்கேட்டபோதே இந்த விபரீதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தனக்கு கண்களில் இரசாயன பதார்த்தமொன்றை ஊற்றி கண்களை செயல் இழக்கச் செய்ததுடன் தன்னை கயிற்றினால் கட்டி தொங்கவிடப்பட்டு தீ வைத்ததாகவும் இதனால் தலைமுடி மற்றும் காதுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன் இரும்பு கம்பியினால் தலை மற்றும் ஏனைய இடங்களில் தாக்கியதுடன் இரும்பு கோலால் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட நிலமையை வெளியில் தெரிவிக்கவோ, கடிதம் மூலம் தொடர்புகொள்ள முடியாத நிலமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மனோகரன் பவானி தெரிவித்தார்.

அங்குள்ள பொலிஸாரிடம் தனக்கு ஏற்பட்ட நிலைமையை தெரிவித்தும் பலனின்றி மீண்டும் எஜமானிடம் கையளித்ததினால் சித்திரவதை மேலும் அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.

"நான் சவூதியில் முதலில் ஒரு வீட்டில் 27 நாட்கள் பணியாற்றினேன். அங்கு மற்றொரு பணிப்பெண்ணுக்கு விழுந்த அடி உதைகளைப் பார்த்து நான் மயங்கி விழுந்தேன்.

அதன்பின் அவ்வீட்டின் எஜமான் என்னை அடித்து வேலைவாய்ப்பு முகவரிடம் தன்னை ஒப்படைத்தார். அதன்பின் வேறொரு வீட்டிற்கு என்னை முகவர் அனுப்பினார். அங்குதான் இந்த கொடுமைகள் எனக்கு நடந்தன.

2 வருடங்களின்பின் அவர்கள் என்னை வீதியில் விட்டுவிட்டு சென்றார்கள். சவூதி பொலிஸார் என்னை இலங்கைத் தூதுரகத்தில் ஒப்படைத்தனர்.

இலங்கைத் தூதரகத்தின் மூலம் நான் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுப்பப்பட்டேன். பின்னர் வாழைச்சேனையை சேர்ந்த பெண் ஒருவர் மூலம் எனது வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வீட்டார் என்னை ஊருக்கு அழைத்து வந்தனர்' என பவானி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட அவல நிலைமைக்கு காரணமான குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சவூதி அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்கள், சமுக அமைப்புக்கள் கிழக்கு மாகண முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் இப்போது தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் பவானியின் குடும்ப அங்கத்தவர் ஒருவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com