ஜனாதிபதி-த.தே.கூ பேச்சில் முத்தரப்பாக முஸ்லிம்களையும் இணைத்துக்கொள்ளவேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களில் முஸ்லிம்களின் தரப்பும் உள்வாங்கப்பட்டு, அதனை முத்தரப்பு பேச்சுக்களாகத் தொடர வேண்டியதன் அவசியத்தை நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருக்கிறோம் – என்று நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் குனி÷யா தகஹாஷியிடம் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விடயத்தில் இங்கு வாழும் முஸ்லிம்களின் பரிமாணமும் இன்றியமையாதது என்பதையும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இனப் பிரச்சினை தீர்வை அடிப்படையாகக்கொண்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், மற்றைய சிறுபான்மையினமான முஸ்லிம்கள் தொடர்பில் அவ்வாறான முயற்சிகள் ஏதும் நடைபெறும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஜப்பானியத் தூதுவர் வினவியபோது பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜப்பானியத் தூதுவர் அமைச்சர் ஹக்கீமை நேற்றுக் காலை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் முதலாம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது மாநாடு பற்றி இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டது. நீதியமைச்சும், வெளிவிவகார அமைச்சும் அதனைக் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.
இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி பல தடவைகள் இங்கு வந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறார் எனக் கூறிய அமைச்சர் ஹக்கீம் தற்போதைய செயற்பாடுகள் யாவையென தூதுவரிடம் ஆர்வத்துடன் கேட்டார்.
0 comments :
Post a Comment