Wednesday, June 22, 2011

பிரபாகரன் என்னை மாத்தயாவுடன் ஒப்பிட்டு பேசினார். பிழைக்கப்போகுது என உணர்ந்தேன்.

கருணா தினகரனுக்கு வழங்கியுள்ள பேட்டியில் முக்கிய விடயங்கள் பல.

புலிகள் இயக்கத்திலிருந்து நீங்கள் பிரிந்து செல்வதற்கு ஐ.தே.க.வே காரணம் எனக் கூறப்படுகிறதே அது உண்மைதானா?
ஒருபோதும் இல்லை. அது தவறான கருத்து. தொடர்ந்தும் அந்த இயக்கத்தில் இருப்பதில் பலனில்லை. உயிரிழப்புக்கள் தான் மிச்சமாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்தேன், பிரிந்தேன் அவ்வளவுதான்.

அரசு-புலிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது புலிகள் உண்மையிலேயே தீர்வொன்றை எட்டவேண்டும் என்ற நோக்கில் பேச்சுக்களை நடத்தினரா?
பேச்சுவார்த்தைக்கு சென்றவன் என்ற வகையில் எமது குழு புறப்படும் போதே பிரபாகரன் இந்தப் பேச்சுவார்த்தையை சுமார் 5 வருடங்களாவது இழுத்துச்செல்லவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார். எப்படி 5 வருடங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தையை இழுத்துச் செல்வது என்ற சிந்தனையுடனேயே புறப்பட்டோம்.

நான் ஆறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டேன். முதல் இரண்டு சுற்று பேச்சுக்களில் பெரிதாக ஏதும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. வெறும் அறிமுகம் மட்டுமே நடந்தது. மூன்றாவது சுற்றுப் பேச்சிலிருந்தே நாம் சமஷ்டிமுறை பற்றி பேசினோம்.

பிரான்ஸ், சுவிஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து அவர்களது நாட்டிலுள்ள முறை பற்றி எமக்கு விளக்கமளித்தார்கள். நாம் சமஷ்டிமுறை பற்றி பேசுகிறோம் என்பதால் அவர்கள் தத்தமது நாட்டில் அமுலிலுள்ள முறைபற்றி விளக்கமளித்தார்கள்.

அரசாங்கம் நோர்வேயுடன் கலந்தாலோசித்து திடீரென்று ஒரு ஆவனத்தை மேசையில் போட்டனர்.

நாம் சமஷ்டிமுறை பற்றி பேசுகிறோம். இப்படியே பேசிப்பேசி காலத்தை இழுத்தடிக்காமல் சஷ்டிமுறைபற்றி இருதரப்பினரும் தொடர்ந்தும் ஆராய்வதற்காக முதலில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவோம். இதில் கையெழுத்து இடுங்கள் என்றனர். இதில் நீங்கள் கையெழுத்திட்டால்தான் பேச்சுவார்த்தையை தொடரலாமா? இல்லையா? என முடிவெடுக்கலாம் என்றார்கள்.

பிரபாகரன் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க வேண்டும் என்கிறார். அரசோ இழுத்தடிக்கக் கூடாதென்கிறது. இந்த நிலையில் பிரபாகரனிடம் கேட்காமல் இதில் கையெழுத்து இடுவது குறித்து உங்கள் தரப்பில் பெரிதும் யோசித்திருப்பார்களே?
கொஞ்சம் எதிர்பார்க்காமல் ஆவணத்தை எம்முன்போட்டதும் அன்டன் பாலசிங்கம் சற்றுக் குழம்பியவராக நீங்கள் முன்பே அறிவிக்காமல் எப்படி இதில் கையெழுத்திடுவது என்று தெரிவித்தார்.

நான் எப்போதும் அன்ரன் பாலசிங்கத்துக்கு அருகில் அமர்ந்திருப்பதால் இதில் என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். பெரிதாக எதனையும் எழுதியிருக்கவில்லை.#
வெறும் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே இருந்தன. சமஷ்டிமுறை பற்றி தொடர்ந்தும் ஆராய்வோம் என்றிருந்தது. வேறு எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அன்ரன் பாலசிங்கம் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ¤ம் கையெழுத்திட வேண்டும்.

நான் உடனே ‘அண்ண அவதிப்படாதீங்கோ இதைக் கொஞ்சம் பாருங்கோ. நாங்கள் வெளியில்போய் கொஞ்சம் இதைப்பற்றி ஆராஞ்சுபோட்டு வருவோம்’ என்றேன்.

ஓம்டா அதுவும் சரிதான் என்று கூறியதுடன் சற்று வெளியில் சென்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்த பின்னர் கையழுத்து வைக்கிறோம் என்று கூறியவாறு வெளியே வந்தோம்.

என்னுடன் உருத்திரகுமாரன், தமிழ்ச்செல்வன், டாக்டர் மகேஸ்வரன், அன்ரன் பாலசிங்கம் மற்றும் நான் ஆன்டி என அழைக்கும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் கலந்துரையாடினோம்.

ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்ல நானும் எனது கருத்தை கூறினேன்.

இது ஒரு நல்ல விடயம். இதனைச் செய்வோம். “ஐரோப்பியர்களுடன் நாம் ஒரு காட்டுமிராண்டிகள் போல பேச்சுநடத்த முடியாது. அவர்களுடன் நாம் சில விடயங்களுக்கு ஒத்துப்போகவேண்டும்” என்றேன்.

உருத்திரகுமாரன் இதற்கு சம்மதித்தாரா?

இல்லவே இல்லை. அவர்தான் கத்திக்கொண்டே இருந்தார். முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் இப்படித்தான் அதை, இதை காட்டி மடக்கினார்கள். அதேபோன்றுதான் எம்மை ஒரு பொறிக்குள் தள்ள முற்படுகிறார்கள் என கூறிக்கொண்டே இருந்தார்.

உங்களுக்கு என்ன தெரியும். போரைப்பற்றி என்ன தெரியும், நீங்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிaர்கள். களத்தில் நின்று போரிடும் எமக்குத்தான் தெரியும் களநிலவரம். தமிbழம் என்பது உடனே அடித்துப்பெறக் கூடியதல்ல என்று கூறினேன்.

இவற்றையெல்லாம் நன்கு யோசித்து முடிவெடுக்கவேண்டும் என பாலசிங்கத்துக்குக் கூறினேன்.

அதேபோல, தமிழ்ச்செல்வனும், டொக்டர் மகேஸ்வரனும் கருணா சொல்வது சரி என்றார்கள். இந்தப் பிரச்சினையின் போது டாக்டர் மகேஸ்வரனும் எனக்கு சார்பாக பேசியதால் அவரை பின்னர் துரத்திவிட்டார்கள். இவர்தான் முதன்முதலாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்.

இந்த சந்தர்ப்பத்தில் அடேல் பாலசிங்கத்தின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது. சண்டையும் சாவும் தொடர்ந்துகொண்டு இருப்பதை அவர் விரும்பவில்லை. “சரியடா பிரபாகரனுக்கு அறிவிப்போம்” என்றார். பிரபாகரனுக்கு அறிவித்தால் இதனை செய்யவிடமாட்டார். பேச்சுவார்த்தைக் குழுவில் தலைமைதாங்கி வந்தவர் நீங்கள், நீங்கள் முடிவு எடுங்கள் என்றேன். இதனை உருத்திரகுமார் கேட்டுக்கொண்டிருந்தார். பாலா அண்ணனும் கையெழுத்திட்டார்.

ஆனால் நாங்கள் திரும்பி வருவதற்கு முன்னரே அங்கு என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான விளக்கத்துடன் பெக்ஸ், ஈ.மெயில் ஊடாக பிரபாகரனுக்கு உருத்திரகுமாரன் ஆட்கள் அறிவித்துவிட்டார்கள்.

நாடு திரும்பும்போது பாலா அண்ணன், “நான் வன்னிக்கு வரமாட்டன். இந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு வன்னிக்குச் சென்றால் என்ட தலையில வச்சிடு வானுகள். நான் வரேல்ல” என்றார்.

நீங்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கின்aர்கள். வன்னி சீதோஸ்னநிலை உங்களுக்கு ஒத்துவராது எனவே நான் லண்டனுக்குச் செல்கிறேன் என்று நீங்கள் பிரபாரனுக்குச் சொல்லுங்கள். நான் இந்த ஆவணத்தை பிரபாகரனிடம் கொடுக்கின்றேன்.

வன்னிக்கு வந்து பிரபாகரனிடம் ஆவணத்தைக் கொடுத்தேன். பாலா அண்ணன் இதைக் கொடுக்கச் சொன்னவர் என்றேன். தமிழ்செல்வன் பேசவே இல்லை, என்ன நடக்குமோ, ஏதுநடக்குமோ என்று நடுங்கிக் கொண்டு நின்றார்.

பிரபாகரனுடன் எவரும் பேசமாட்டார்கள். அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு தலையாட்டிக்கொண்டிருப்பார்கள். எவருடைய ஆலோசனை யையும் அவர் கேட்கமாட்டார். அவரது தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்.

எனக்குத் தெரியுமடா எங்கட போராட்டத்தை வித்துப்போட்டு வந்து நிற்கிaர்கள் எனக்கூறியவாறுதான் எம்மை வரவேற்றார். முகம் சிவந்து கடும் கோபத்தில் இருந்தார்.

பிரபாகரனை எதிர்த்துப் பேசுவீர்களா?

நான் மட்டும்தான் அவருடன் வாதாடுவேன், கருத்துக்கூறுவேன். மற்றவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருப்பார்கள்.

நான் உடனே ஆவணத்தைக் கையிலெடுத்துப் படித்துப்பாருங்கள், இதில் நாங்கள் பயப்படும் அளவுக்கு எதுவும் கிடையாது என்றேன். ஆவணத்தை வாங்கியவர் கசக்கியெறிந்துவிட்டார். ஏனெனில், ஏற்கனவே உருத்திரகுமாரன் அனுப்பிய ஆவணத்தைப் படித்துவிட்டார்.

ஆவணத்தை எறிந்தவுடன் எனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. வெளிக்காட்டவில்லை.

நீங்கள் அவருக்கு தெளிவுபடுத்த முயற்சிக்கவில்லையா?
அண்ண எனக்கு இது நல்லதாகவே தெரியுது. ஏனெனில் சர்வதேச சமூகம், உலகம் என்பவற்றை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு சாதிக்கமுடியாது. எனவே இது பற்றி கொஞ்சம் சிந்தித்திப் பாருங்கள். இது ஒன்றும் பாரிய விடயமாக தென்படவில்லை என்றேன்.

கிளிநொச்சியில் அன்று மாலை 3.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடந்துகொண்டிருந்தது. உடனே சகல தளபதிகளையும் அழைக்குமாறு தமிழ்ச்செல்வனுக்கு உத்தரவிட்டார். இது கிட்டத்தட்ட மத்திய குழுக்கூட்டம் போலானது. இயக்கத்திலுள்ள சகல துறைசார்ந்த தளபதிகளும் அழைத்துவரப்பட்டனர். சூசை, பால்ராஜ், தமிழேந்தி, நடேசன் உட்பட இயக்கத்திலுள்ள அத்தனை தளபதிகளும் வந்தாயிற்று.

மாநாட்டு மண்டபத்தைப்போல நீள்வட்ட மேசையின் நடுவில் பிரபாகரன் அமர்ந்திருக்க அவருக்கு வலப்புறம் நானும், இடப்புறம் தமிழ்ச்செல்வனும் அமர்ந்திருக்க இரு மருங்கிலும் தளபதிகள் அமர்ந்திருந்தனர்.

விடுதலைப் போராட்டத்தைக் காப்பாற்றுவதற்காக பேச்சுவார்த்தைக்கு அனுப்பினேன். இவங்கள், போராட்டத்தை வித்துப்போட்டு வந்திருக்கிறாங்கள் என என்பக்கம் கையைக்காட்டிக் கூறினார். ஆனால் தமிழ்ச்செல்வன் பக்கம் கையைக்காட்டவில்லை. எனக்குத் தொடர்ந்தும் அர்ச்சனைக்கு மேல் அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது.

போர்க்களம் என்ன என்றே தெரியாத அந்தப் பக்கமே தலைவைத்துப்படுக்காத பாலகுமாரன், தமிழேந்தி, நடேசன் ஆகியோர் “இப்படிச் செய்துவிட்டுவந்துவிட்டார்களே. விட்டுக்கொடுக்கலாமா? எவ்வளவோ உயிர்கள் பலியாகிவிட்டன, சகலரும் அழிந்தாலும் விட்டுக்கொடுக்ககூடாது” என கோபத்தில் இருக்கும் பிரபாகரனை மேலும் உசுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் போர்க்களத்தில் நின்று போரிடும், போரிட்ட தளபதிகள் பேசாமல் மெளனமாக இருந்தார்கள். அவர்கள் எனக்கு கீழே இருந்தவர்கள். நான் எதைச் செய்தாலும் சரியானதாகக் தான் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள்.

தொடர்ந்தும் என்னைப் பேசிக்கொண்டிருந்த பிரபாகரன், கருணா தான் இதற்குக் காரணம் என்றார். எனக்கும் கோபம் வந்தது. எனினும் அதனை பெரிதாக வெளிக்காட்டாமல் பேச்சுவார்த்தைக்கு பொறுப்பானவன் நான் அல்ல. இதில் கையெழுத்திட்டவனும் நானல்ல. அண்டன் பாலசிங்கம்தான் எனவே அவரையும் கேளுங்கள். இதில் ஏதும் நியாயம் இருந்ததால்தானே அவர் கையெழுத்திட்டார் என்றேன்.

இல்லை நீ சொல்லித்தானே அவர் கையெழுத்திட்டார் என பிரபாகரன் கூறினார். உருத்திரகுமாரன் என்னை நன்றாக இறுக்கிவிட்டிருந்தார் என்பது புலனாகியது.

“உண்மை தான், இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. பேச்சுவார்த்தையை ஐந்து வருடத்துக்கு (இழுத்தடிக்க) தொடரவேண்டுமென்றால் வெறுமனே போய் போய் சாப்பிட்டுவிட்டுவருவதா? ஏதாவது அடிப்படை இருக்கவேண்டும். அதனை மையமாக வைத்து பேச்சுவார்த்தையை நகர்த்தவேண்டும். வடக்கு, கிழக்கு சுயாட்சி என்பவற்றுக்கு இது ஒரு அடித்தளமாக இருக்கும்” என்றேன்.

பிரபாகரனின் கோபம் இன்னும் அதிகமாயிட்டு. “மஹத்தயாவும் இப்படித்தான்டா எனக்குத் துரோகம் செய்தான்” என்றார் இறுதியாக.

மஹத்தையாவுடன் என்னை ஒப்பிட்டுவிட்டார் எனக்கு முழுமையான வெறுப்புத் தட்டிவிட்டது. ஏனெனில், பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு காரணமாக இருந்தவனே நான்தான்.

இந்தியப் படை வந்தபோது அவர்களுடனான யுத்தத்தில் பிரபாகரனை பாதுகாப்பாக காட்டுக்குள் வைத்திருந்தேன். வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளுக்கு ஆட்களை அனுப்பியது மட்டுமல்லாமல் தலைமைதாங்கி பல வெற்றிக்கு வழியமைத்துக்கொடுத்தவனும் நான்தான்.

எல்லோரும் ஒன்றிணைந்து என்மீது பழியைப்போட முற்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். விசயம் பிழைக்கப்போகிறது என்பதையும் உணர்ந்தேன். நான் இன்னும் கொஞ்சம் பிரபாகரனுடன் வாதிட்டுப் பேசியிருந்தால் என்னை சிறையில் அடைத்திருப்பார்.

இனி மூளையைப் பயன்படுத்தித் தப்பிவிடவேண்டும் என எண்ணினேன். “சரி உங்களுக்கும் பிடிக்கவில்லை. மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. நானே அடுத்த பேச்சுவார்த்தைக்குச் சென்று அவர்களிடம் கூறிவிடுகிறேன்” என்றேன்.

அதைத்தான் நீ செய்யவேண்டும். இதனை நீயேதான் செய்யவும் வேண்டும் என்றார். அத்துடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் எனக்கு மனம்விட்டுப்போனது. ஒரு வெறுப்புத்தோன்றியது. யுத்தம் புரிவதென்றாலும் ஒரு அர்த்தத்துடன் யுத்தம் புரியவேண்டும். அர்த்தமில்லாமல் ஒரு இலக்கு இல்லாமல் உயிர்களைப் பலிகொடுப்பதில் என்ன பலன்.

ஆனையிறவு தாக்குதல் வெற்றி. அது உங்களின் தலைமையில்தான் நடந்ததாகக் கூறுகிறார்களே அது உண்மைதானா?
அது மட்டுமல்ல முழுவதும் நான்தான். இராணுவத்துக்குரிய மூளை என்பதை நான்தான் வைத்திருந்தேன். படைகளில் பிரச்சினையில்லை. ஆட்பலம் என்னிடமிருந்தது. மஹத்தயாவுடன் என்னை ஒப்பிட்டது உள்ளிட்ட அவர்களது பேச்சு என்னை சற்றுச் சிந்திக்கவைத்தது. இனி நான் இங்கிருக்கக்கூடாது என்று உணர்ந்தேன்.

அரசு-புலிகளுக்கிடையிலான ஒப்பந்தத்துக்கு அமைய, புலிகளில் ஆறு தளபதிகளுக்கு ஹெலிக்கொப்டரில் சென்றுவரலாம் என்ற அனுமதியிருந்தது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஊடாக இதனைப் பெறலாம்.

“பேச்சுவார்த்தையிலிருந்து வந்திருக்கிறேன். இது தொடர்பாக கிழக்கில் தளபதிகளுக்கு விளக்கமளிக்கவேண்டும் எனக்கு காலையில் மட்டக்களப்புச் செல்ல ஹெலிகொப்டர் வேண்டும்” எனக் கேட்டேன். காலை 7 மணிக்கு ஹெலிகொப்டர் வரும் என கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்தனர்.

நான் விடியவிடியத் தூங்கவில்லை. கிளிநொச்சி மைதானத்துக்கு ஹெலிக்கொப்டர் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். கிளிநொச்சியில் மோசமான காலநிலை காரணமாக ஹெலியைத் தரையிறக்க முடியாது ஓமந்தைக்கு வரமுடியுமா எனக் கேட்டனர்.

எனக்கும் இது சரியாகவே பட்டது. கிளிநொச்சி மைதானத்துக்கு அருகில்தான் பிரபாகரனின் வீடு. ஹெலிகொப்டர் வந்தால் ஏன் வருகிறது, யார் வருகிறார்கள், யார் போகப்போகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரனுக்குத் தெரிந்துவிடும். எனவே நான் ஓமந்தைவந்து அங்கிருந்து மட்டுநகர் சென்றுவிட்டேன்.

உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கையான படைவீர்கள் கிளிநொச்சியில் இருந்தார்களா?
ஆமாம், என்ன பிரச்சினை நடக்கிறது என்பது தெரியாது. ஆனால் வந்தாலும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

பகல் ஒருமணியளவில் கருணாவை அழைத்துவருமாறு பிரபாகரன் தமிழ்ச்செல்வனிடம் கூறியிருக்கிறார். தமிழ்ச்செல்வனும் என்வீட்டில் என்னைத் தேடியபோது நான் மட்டக்களப்புக்குச் சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்கள். எப்படிப்போனார் என ஆச்சரியமாகக் கேட்டுள்ளார். ஹெலிக்கொப்டரில் சென்றுவிட்டார் என பதிலளித்திருக்கிறார்கள்.

உடனே தொலைபேசியில் வன்னிக்கு வருமாறு என்னை அழைத்தனர். நான் அங்கு வரமாட்டான் என்றேன். எனக்கு இவ்வாறு யுத்தம் செய்யமுடியாது. எனினும் நான் குழப்பமாட்டேன். போரிடுவதன்மூலம் எமது இலக்கை அடையமுடியாது என்பதை நம்புகிறேன். யுத்தம் புரியத்தான் வேண்டுமென்பது உங்கள் நிலைப்பாடு.

இனிமேல் யுத்தம் புரியமுடியாது என்பது எனது நிலைப்பாடு. முடிந்தால் நீங்கள் யுத்தம் செய்து உங்கள் இலக்கை அடையுங்கள். நான் அனைத்தையும் விட்டு ஒதுங்கிவிடுகிறேன். எனது போராளிகள் அனைவரையும் அவர்களது வீட்டுக்கே அனுப்பிவிடுவேன். ஆனால் நீங்கள் அவர்களையும், என்னையும் சுடக்கூடாது. நான் உங்கள் போராட்டத்தைக் குழப்பமாட்டேன் என்றேன்.

நான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தமைக்காக பலர் உரிமைகொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள். அரசு- புலிகள் உடன்படிக்கையின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிதான் நான் புலிகளிலிருந்து பிரிந்துசெல்வதற்கு காரணமானது என பலரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

பேச்சுவார்த்தையில் பிரபாகரனுக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடு, நாம் பெற்ற வெற்றிகள் அனைத்தையும் எமக்கு சாதகமாக பயன்படுத்த தவறியமை, தேவையற்ற உயிரிழப்புகள், தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது போன்ற காரணங்கள்தான் நான் பிரிந்துசெல்வதற்கு பிரதான காரணங்களாக இருந்தன. இவற்றைத்தான் இந்த நேர்காணலினூடாக விளக்கமாக தெரிவித்திருக்கிறேன்.

நேர்காணல்: கே. அசோக்குமார்

நன்றி:தினகரன்


1 comments :

Rajendran June 23, 2011 at 12:38 PM  

vetriyaimatum neer thalamai thangi naadathi thandhu vitadhaga arivithu ullai neer Anna vin kilinochi udaha meetingla than unathu mugam ellum kollum vedichathu anna sathyapiramanam patri ummidam kelvi ketta pothu ethuvum pathil alikkamal veruppudanum poramaiyudanum amarntha kathai anna vidam therivithu irunthen annal anna unnai ippadi neer seivai enna nambavillai

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com