Thursday, June 16, 2011

இணைய மோசடி: இந்தோனீசியா, மலேசியாவில் பலர் கைது

இணைய மோசடியில் ஈடுபட்ட சீனா, தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஆசிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சந்தேகப்பேர்வழிகள் 37 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 27 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்; மற்ற 10 பேர் தைவானியர்கள்.

மலேசியப் போலிசார் கோத்தா கினபாலுவில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது அந்த 47 பேரும் கைது செய்யப்பட்டதாக மலேசியப் போலிசார் கூறினர்.

ஒரு கும்பல் உறுப்பினர்கள், சீனாவில் வசிக்கும் சிலரிடம் தொடர்புகொண்டு அவர்களுக்கு போக்குவரத்து அழைப்பாணை வந்திருப்பதாகவும் அதற்கான அபராதத் தொகையை இணையம் வழியாக செலுத்தும்படியும் கூறுகின்றனர்.

அந்த அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கக்கூடும் என்று அக்கும்பல் மிரட்டல் விடுக்கவும் செய்கிறது.

சீனா மற்றும் தைவானில் உள்ள அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் மலேசியப் போலிசார் அந்த கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களை மலேசியாவில் கைது செய்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.

கோத்தா கினபாலுவில் சென்ற மாதம் செயல்பட்டு வந்த அக்கும்பல் பின்னர் அதன் நடவடிக்கைகளை சீனா மற்றும் தைவானுக்கு மாற்றியதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் இந்தோனீசியாவில் இத்தகைய சந்தேகப் பேர்வழிகள் 170 பேரும் கம்போடியாவில் 166 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேங்காக் தகவல் கூறியது.
சீனாவிலும் தைவானிலும் இணையம் வழி மோசடியில் ஈடுபட்ட கும்பல் உறுப்பினர்கள் தங்களை ஒரு போலி நிறுவனத்தின் முதலாளிகள் என்று கூறிக்கொண்டு நிதிச் சேவைகள் வழங்குவதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளனர். சீனாவிலும் தைவானிலும் இத்தகைய கும்பலிடம் பலர் ஏமாந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com