உலகின் எந்த நாட்டையும் தாக்கும் ஏவுகணைகளை நாம் தயாரிக்கவேண்டும். இந்தியா
உலகத்தில் எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கக்கூடிய ஏவுகணையை இந்தியா தயாரிக்க வேண்டும் என்று விமானப்படை தலைமை தளபதி பிரதீப் வசந்த் நாயக் தெரிவித்துள்ள யோசனை பல தரப்பிலும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. தற்போது நம்மிடம் அக்னி3 ஏவுகணைகள் இருக்கின்றன. இவை மூவாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து இலக்குகளை தாக்கி அழிக்க வல்லவை. அக்னி5 தயாராகி வருகிறது. அது ஐயாயிரம் கி.மீ செல்லக்கூடியது.
சீனாவின் வடகோடியில் உள்ள நகரத்தை, இந்தியாவின் தென்கோடியில் இருந்து தாக்குவதானால்கூட அக்னி5 போதும். இந்த வருட இறுதியில் அது சோதனை செய்யப்பட இருக்கிறது. இவற்றை மத்திய தூர ஏவுகணை என்பார்கள். நாயக் விரும்புவது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ஐசிபிஎம் வகை ஏவுகணை. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகளிடம் இந்த வகை ஏவுகணைகள் இருக்கின்றன. பதினைந்தாயிரம் கி.மீ செல்லக்கூடியவை.
இந்த ஏவுகணை பூமியின் காற்று மண்டலத்தை விட்டு வெளியேறி, இலக்கை நெருங்கியதும் மீண்டும் காற்று மண்டலத்துக்குள் பிரவேசிக்கும் தன்மை கொண்டது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் நாம் கணிசமாக முன்னேறி இருந்தாலும், வேற்று கிரகத்துக்கு சென்று திரும்பிவருவது மாதிரியான தொழில்நுட்பத்தை இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை.
1974ல் அணுகுண்டு வெடித்ததில் இருந்து இந்தியா மீது உயர் தொழில்நுட்ப தடை விதிக்கப்பட்டதால், நமது ராக்கெட்டுக்கு ரஷ்யாவின் கிரையோஜெனிக் இன்ஜின் கிடைக்காமல் தவித்தோம். இன்றுவரை அந்த பிரச்னை தீரவில்லை. இந்த நிலையில் பத்து ஆண்டுகளும் பத்தாயிரம் கோடியும் செலவிட்டு ஐசிபிஎம் தயாரித்து யாரை தாக்க போகிறோம்? சீனாவுக்கு அப்பால் எதிரிகள் இல்லை.
பிராந்திய வல்லரசாக நின்றுவிடாமல் உலக அளவில் சக்தியாக தலைதூக்க அது அவசியம் என்கிறார் நாயக். அணு ஆயுதங்கள் பேரழிவு ஏற்படுத்தும். அதிலும், இடையில் நிறுத்தவோ அவசரமாக திருப்பி அழைக்கவோ வழியில்லாத தொலைதூர ஏவுகணையில் அணுகுண்டு பொருத்தி அனுப்புவது ரொம்பவும் ஆபத்தான விஷயம். இதிலெல்லாம் தளபதிகள் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது எந்த பலனும் தரப்போவது இல்லை.
0 comments :
Post a Comment