கருணா தலைமையில் கொல்லப்பட்ட 600 பொலிசாருக்கு நினைவஞ்சலி!
ஈழம் போர் இரண்டு என புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட போர் வடகிழக்கில் முதல் முதலில் பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்தது. கிழக்கின் தாக்குதல்களுக்கு அன்றைய மட்டு அம்பாறை மாவட்ட இராணுவத் தளபதி கருணா தலைமை தாங்கினார். நிராயுதபாணிகளாக சரணடைந்த 600 க்கு மேற்பட்ட பொலிஸார் கோரப்படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோருக்கான 21ம் ஆண்டு நினைவஞ்சலி கொண்டாடப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பொலிஸ் பிரிவுகளில் இருந்து சரணடைந்த பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள 450க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினத்தின் முக்கிய சடங்கு கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் தியாகிகள் நினைவு மையத்தில் நடந்தது.
இலங்கையின் பொலிஸ்துறை தலைவராக இடைக்காலப் பணியாற்றிவருகின்ற ஐ.ஜி.பி. இலங்ககோன் இந்த நினைவுச்சடங்குக்கு தலைமையேற்றிருந்தார்.
இருபத்தொரு ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடையாமல் இருப்பது கவலையளிக்கிறது என்று அச்சமயம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரியான டஸ்ஸி சேனவிரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த மோசமான சம்பவம் அரங்கேறிய நேரம் கிளர்ச்சி அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் இப்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் துரதிருஷ்ட நிலையை நாம் காண்கிறோம் எனவும் அவர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் உத்தரவுக்கு அமைய விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த பொலிஸ்காரரகள் அறுநூறு பேரை விடுதலைப் புலிகள் கொன்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
1987ல் இந்திய மத்தியஸ்தத்தின் ஊடாக இலங்கையில் கொண்டுவரப்பட்டிருந்த போர்நிறுத்தம் இந்த சம்பவத்துடன் தான் முடிவுக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment