Wednesday, June 22, 2011

4,800 கி.மீ. வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் விமானம் தயார்!

அதிபயங்கர வேகத்தில் பறக்கும் விமானத்தை ஏர்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் இன்ஜின்கள் இதில் பொருத்தப்படுகின்றன. ஹாலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏர்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்களில் விமானங்களை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் ஹைலைட்டாக இடம் பிடித்திருப்பது இஏடிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேக்4’ எனப்படும் ஹைப்பர்சானிக் விமானம்.

ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீ. இதைவிட வேகமாக செல்பவை ‘சூப்பர்சானிக்’ விமானங்கள். ரஷ்யாவின் டுபோலவ் நிறுவனம் ‘டியூ 144’ என்ற சூப்பர்சானிக் விமானத்தை 1968ல் அறிமுகப்படுத்தியது. 1978 ம் ஆண்டு வரை இது இயக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ‘கன்கார்டு’ சூப்பர்சானிக் விமானம் 1976ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. அதிக செலவு, அதிக விபத்து வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இதுவும் 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் போக்குவரத்துக்கு சூப்பர்சானிக் விமானங்கள் தற்போது இயக்கப்படுவது இல்லை.

இந்நிலையில், ஒலியைவிட சுமார் 4 மடங்கு அதிகமாக, மணிக்கு 4,800 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சானிக் விமானத்தை இஏடிஎஸ் வடிவமைத்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 1,800 கி.மீ. தூரத்தில் உள்ள டெல்லிக்கு இந்த விமானத்தில் 20 நிமிடத்தில் போய்விடலாம். இந்த விமானத்தில் 3 இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை செல்ல 2 இன்ஜின்களும் அதன் பிறகு ‘ஹைப்பர்சானிக்’ வேகத்தில் பறக்க இன்னொரு ராம்ஜெட் எனப்படும் இன்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணை, ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின். வழக்கமான விமான ஓடுதளத்தில் இருந்தே இந்த விமானத்தை இயக்க முடியும். எரிபொருளாக ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலவை பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிக்காது. ஹைப்பர்சானிக் விமானத்துக்கான டிசைனிங் முடிந்துவிட்டது. 100 பயணிகள் செல்வதற்கு ஏற்ப விமானம் கட்டப்படும் என்கின்றனர் இஏடிஎஸ் விஞ்ஞானிகள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com