Tuesday, June 14, 2011

16 கோரிக்கைகளுடன் TULF, PLOTE, EPRLF இந்திய தூதுக்குழுவைச் சந்தித்தது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய உயர் மட்ட தூ துக்குழு வினரை ரியுஎல்எப் , புளொட் , ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து இலங்கை நிலைமைகள் தொடர்பாக பேசியதுடன் இந்திய அதிகாரிகளிடம் 16 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

அவை வருமாறு.
1. எல்லாவற்றிற்கும் முன்னாக, அனைவரும் அறிந்தது போல், இனைப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதே. பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், பலரின் ஆதரவை பெற்றுள்ள எனது இந்திய முறையிலான தீர்வு திட்டத்தை, திருப்திகரமான ஓர் தீர்வாக ஏற்றுக்கொள்ளலாம். அரசு ஒற்றையாட்சி முறையையே தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும் அத்தகைய ஓர் தீர்வு எம்மக்களக்கு ஏற்புடையதாக ஒரு போதும் அமையாது.

2. வட கிழக்கு மக்கள் தாம் ஏறக்குறைய 25 ஆண்டுகள் அநுபவித்து களைத்த அடக்குமுறை ஆட்சியை விருப்பவில்லை. இராணுவ ஆட்சிமுறை உடனடியாக களையப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இராணுவத்தினதும், விடுதலைப்புலிகளினதுமான கொடூரமான நடவடிக்கைகளை அறிந்த மக்கள், வடகிழக்கில் பல்வேறு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை அறிந்து நடுங்குகின்றனர். யுத்த நிறுத்த உடனபடிக்கைக்கு முன்பிருந்த முகாம்களுக்குள் இராணுவத்தை முடக்கிவைப்பதை மட்டும் அவர்களை ஏற்க வைக்கமுடியும். யுத்தகாலத்திலும், யுத்தம் முடிவடைந்த பின்பும் நுற்றுக்கணக்கான முகாம்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. அத்தனை முகாம்களும் உடனடியாகவே மூடப்பட வேண்டும்.

3. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக விசாரணை இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள பல நுற்றுக்கணககான இளைஞர்களை உடனடியாகவே நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும் அன்றேல் விடுதலை செய்யப்படவேண்டும்.

4. விரைவில் விடுவிக்கப்படுவர் என அரசு உறுதியளித்தமையால் புலிகளுடன் தொடர்பு ஏதேனும் வைத்திருந்தவர்கள் அரசின் வேண்டுகோளுக்கு அமைய தாமாக முன்வந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வு மையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எவர் மீதும் குற்றம் இருப்பின் அவர்களை மட்டும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி ஏனையவர்களை உடனடியாக விட சொல்ல வேண்டும்.

5. தன்னுடையது என உரிமை கோரும் எவரையும் அவரவர் காணிகளில் வசிக்க இடமளிக்கவேண்டும். இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே காணிக்கு உரிமை கோரின் சிவில் அதிகாரிகள் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் இதே விதி உயர்பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் காணிகளுக்கும், விடுதலைப்புலிகள் பணம் கொடுத்தோ பலாத்காரமாகவோ கைப்பற்றிய காணிகளுக்கும் பொருந்தும்

6. இன்றும் கூட இழக்கப்பட்ட காணாமல் போன மக்களின் விபரங்கள், அவர்களுடைய அசையும் அசையா ஆதனங்கள் பற்றிய புள்ளிவிபரங்களை சேகரிப்பதற்கு காலம் கடந்துவிடவில்லை.

7. புதுப்பிரச்சனைகளை உருவாக்காது அரசு இராணுவத்தினருக்கு கிளிநெச்சியிலும், வடக்குகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் வீடுகள் அமைப்பதை கைவிடவேண்டுமென தூதுக்குழு வற்புறுத்த வேண்டும். இந்த வீடுகட்டும் நடவடிக்கை அரசு இப்பகுதி மக்களை நிரந்தரமாக அடக்கி வைக்க எடுக்கும் நடவடிக்கை என மக்களின் பார்வைக்குத் தோன்றும். உண்மையும் அதுவே.

8. விடுதலைப்புலிகளுக்கு தமது காணிகளை விற்றவர்களையும் அவர்களுக்குப் பயத்தின் காரணமாக தமது காணிகளை கையளித்தவர்களையும் அரசு தண்டிக்கக்கூடாது. அரசு உடனடியாக கிளிநெச்சிப்பகுதிகளிலும், வடக்குகிழக்கின் ஏனைய பகுதிகளிலும், பரவிப்பாஞ்சான் கிராமம் உட்பட தற்போது முள்கம்பியால் சுற்றி அடைத்து வைத்துள்ள காணிகளினை, புலிகளிடமிருந்து தாம் கைப்பற்றியதாக கூறுவதை விடுத்து, உரியவர்களிடம் கையளிக்க வேண்டும்.

9. பல்வேறு ரக வாகனங்கள், லொறிகள், கார்கள், உழவுயந்திரங்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார்வண்டிகள் போன்றவை முற்றாக அழிக்கப்பட்டும், திருத்த முடியாத நிலையிலும் உள்ளன. பல காணாமற் போயுமுள்ளன. இவற்றின் உரிமையாளர்களுக்கு நட்ட ஈடோ அன்றி புதிய வாகனங்களை வாங்க உதவியோ செய்து கொடுக்கப்பட வேண்டும்.

10. தற்போதுள்ள அபிவிருத்தி வேலைகளில் மிகக் குறைவான உள்ளுர் வாசிகளே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு உதவியுடன் செயற்படுத்தப்படும் திட்டங்கள், அல்லது அவை போன்றவற்றில் உள்ளுர் வாசிகளின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

11. அரசகாணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் பூராகவும் தத் தமது காணிகளுக்கு இன்னும் போய்ச்சேரவில்லை. இந்த நிலையில் உறுதிகள் காணிகளுக்கு வழங்குவது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். சொந்தக்கார்கள் தமது காணிகளை அடையாளம் கண்டு குடியேறும் வரை உறுதிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

12. அவசரகாலச்சட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.

13. உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற தாபனங்கள் மீண்டும் செயற்பட அனுமதிக்க வேண்டும்.

14. இனம் காணப்படாத பலருக்கு பெறுமதிமிக்க அரச காணிகள் வழங்கப்படுகின்றது தெளிவாகத் தெரிகின்றது. வட கிழக்கில் பெறுமதி மிக்க பல காணித்துண்டுகள் வெளியாருக்கு முறைதலை இன்றி கொடுக்கப்படுவது உள்ளுர் மக்களுடன் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

15. மற்றைய ஏழு மாகாணங்களைப் போலல்லாது வடகிழக்கு நிர்வாகங்களை உரிய அதிகாரிகளிடமும் அப்பகுதி மக்களிடமும் விட்டுவிடாமை துர் அதிர்ஸடமே. இப்பகுதி மக்களை அரசு ஒன்றும் தெரியாத ஆதிவாசிகள் போல் நடாத்தி உள்ளுர் மக்களின் கருத்துக்களையும் பெறாமல் அவர்களின் உதவிகளையும் பெறாமல், அரசு பொறுக்கி எடுக்கும் ஒரு சில கையாட்களை வைத்து தனது செயற்றிட்டங்களை, தம்மிஸ்டம் போல் நிறைவேற்றுகின்றது;.இது தவிர்க்கப்பட பெண்டும்.

16. இடம் பெயர்ந்த மக்கள் யுத்தத்தினால் இழந்;த உயிர்களுக்கும் சொத்தக்களுக்கம் நட்டஈடு வழங்குவதை அரசு செயற்படுத்த வேண்டும். இவ்வாறு நட்ட ஈடு வழங்குவதாக ஐனாதிபதியவர்கள் யுத்தத்தின் போது உறுதியளித்துள்ளார்.

இவற்றை விட இன்னும் பலவிடயங்கள் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர உள்ளன. மிக்க விசுவாசமாக நான் உங்களை வேண்டுவது யாதெனில், மக்கள் தம் சாதாரணமான வாழ்க்கையை ஆரம்பிக்கும் வரை அரசு தமது திட்டங்களை முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு, மக்களை குழப்பக்கூடாது என்பதே. இடம்பெயர்ந்த மக்கள், தாம் முன்பு இருந்த இடத்திலேயே எவ்வித மாற்றமும் இன்றி வாழ்கின்றோம் என்ற எண்ணம் வர வேண்டுமே தவிர ஓர் அன்னிய இடத்தில் புதிய சூழ்நிலையில், புதய மனிதர்கள் மத்தியில் வாழ்கின்றோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேகூடாது.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com