Friday, May 20, 2011

யாருக்கும் கொலை செய்ய உரிமை கிடையாது பிள்ளையானுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை. .

மட்டக்களப்பில் இடம்பெற்ற இரு கொலைகள் தொடர்பான கைதுகளை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான பிரதீப் மாஸ்ரர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டதுடன், பிள்ளையானது அலுவலகம் உட்பட ரிஎம்விபி முக்கியஸ்தர்கள் பலரது வீடுகளும் கொழும்பிலிருந்து சென்றிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அணியினரால் சல்லடைபோட்டு சோதனையிடப்பட்டது.

பிரதேசத்தில் தெருச்சண்டியர்களாகவும், குறு நிலமன்னர்களாகவும் வலம்வந்த ரிஎம்விபி யினர் தாம் அரசுடன் இணைந்திருப்பதாகவும், தாம் எதை செய்தாலும் அரசு கண்டுகொள்ளப்போவதில்லை எனவும் மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்த மாயை மேற்படி சோதனை மற்றும் கைதுகளுடன் தவிடுபொடியானதுடன், தற்போது மக்கள் ரிஎம்விபியினர் மீது புகார் கொடுக்க முடியும் என்பதை அறிந்து கொண்டுள்ளனர்.

இந்நிலைமைகள் தமது நிலைப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் என உணர்ந்த பிள்ளையான் நேற்று தனது கட்சி உறுப்பினர்களுடன் சென்று ஜனாதிபதியை சந்தித்து பொலிஸாரின் நடவடிக்கைகள் தமக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசியல் ரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதென முறையிட்டுள்ளார்.

பிள்ளையானின் முறைப்பாட்டை நன்கு செவிமடுத்த ஜனாதிபதி இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பான விரைவான அறிக்கை ஒன்றை தனக்கு தருமாறு பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்ட அதே நேரம் யாருக்கும் கொலைகளை செய்யும் உரிமை கிடையாது எனவும் அவ்வாறு இடம்பெற்றால் அதற்கான சட்ட நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்க தயாராக இருக்வேண்டும் எனவும் பிள்ளையானிடம் மிகவும் இறுக்கமாக தெரிவித்தாக அலறிமாளிகை வட்டாரங்களிலிருந்து இலங்கைநெற்றுக்கு தெரியவிருகின்றது.

மறுபுறத்தில் கொல்லப்பட்ட நபர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எனவும் அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தவர் எனவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ள கருணா எனப்படுகின்ற முரளிதரன் பிள்ளையான அணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டிவருவதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com