Wednesday, May 11, 2011

கனிமொழி சென்னை வருமான வரித்துறை அலுலகத்தில் நேரில் ஆஜராக

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி சென்னை வருமான வரித்துறை அலுலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1.76 லட்சம் கோடி ரூபாய் அளவில் நடைபெற்றுள்ள ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகூரா உள்ளிட்ட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய் கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக கைமாறியிருப்பது சி.பி.ஐ. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களாக உள்ள கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லி பட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆஜரான கனிமொழி, கைது நடவடிக்கையை தவிர்க்க முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 14 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 14 ம் தேதி வரை நாள்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராக கனிமொழிக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கனிமொழி, சரத்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில், வருமான வரித்துறையும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகும்படி கனிமொழி மற்றும் சரத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் கலைஞர் டி.வி.யை தொடங்க தீவிர முயற்சி மேற்கொண்ட கனிமொழி அதன் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்த டி.வி.யின் நிர்வாகியும், கருணாநிதியின் நெருங்கிய உறவினருமான அமிர்தம், சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com