Thursday, May 12, 2011

வெள்ளைக்கொடி விகாரம் : நான் கூறியவற்றை ஜெய்ன்ஸ் திருவுபடுத்தியுள்ளார்.

வன்னியில் போரில் தோல்வியடைந்த புலிகள் சரணடையும் நோக்கில் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதற்கான உத்தரவினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியிருந்தார் என முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக வெளியான செய்தி தொடர்பாக அவர் மீது அரசு வழக்கு தொடந்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெனரல் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸ் வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிவித்துள்ளார்.

பெட்ரிகா ஜேன்ஸ் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு தான் அளித்த பதிலை அவர் திரிபுபடுத்தி எழுதியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதென சரத் பொன்சேகா நீதிமன்றில் இன்று சுட்டிக்காட்டினார்.

40 வருடங்கள் இராணுவ சேவையில் இருந்த தான் இராணுவத்தினருக்கு அகௌரவம் ஏற்படும் வகையில் செயற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் செயற்படப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றில் சரத் பொன்சேகா சாட்சியமளித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு இருமல் ஏற்பட்டதால் நீதிமன்ற நடவடிக்கைகள் சுமார் 10 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்டதுடன் சற்று நேரம் மன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

சிரேஷ்ட வழக்குரைஞரான நளின் லத்துவ ஹெட்டியின் வழிநடத்தலில் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை வெளியிடும் நோக்கில் பேசிய அவரால் இருமல் ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது.

அவரின் வழக்குரைஞர் இப்படியான இருமல், சரத் பொன்சேகா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சியின் பின் உண்டானது என கூறினார். இவர் சிறையில் இருப்பதால் இதற்கான சிகிச்சையை தொடர்ந்து பெறமுடியவில்லை என அவர் நீதிமன்றுக்கு விளக்கினார்.

வழக்குரைஞரின் வாதத்தினைக் கருத்திற்கொண்ட நீதிபதிகள், விசாரணையை இடைநிறுத்தியதுடன் எதிர்வரும் 19, 26ஆம் திகதிகளில் அறிக்கையை விடுமாறு கூறினர்.

அதேநேரம் ஜெனரல் பொன்சேகாவிற்கு குண்டுத்தாக்குதலின் பின்னர் உருவான நோய்களுக்கு பரிகாரம் செய்து வந்த வீசேட வைத்திய நிபுணர் டாக்டர் விஜித தென்னக்கோணிடம் அவரை வைத்திய பரிசோதனைக்கு கூட்டிச்செல்லுமாறு நீதிபதிகள் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com