சிறையிலடைக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவி விலகினார்.
மேலுமோர் பெண் ஊடகவியலாளரும் பாலியல் பாலாத்கார முறைப்பாடு.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேநேரம் கான் மீது பிரான்சிலுள்ள மேலுமோர் பெண் ப த்திரிகையாளர் பாலியல் குற்றச்சாட்டினை சுமத்தி முன்வந்துள்ளார்.
பல்வேறு குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்துலக பண நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க்கில் உள்ள ஒரு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஓட்டல் பணிப்பெண்ணை கற்பழிக்க முயன்றது, அந்தப் பெண்ணை ஓட்டல் அறையில் அடைத்து வைத்தது, பாலியல் தொந்தரவு கொடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சாட்டப்பட்டுள்ளன.
அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கான், தன்னை பிணையில் விடுவிக்குமாறு செய்திருந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். பிணையில் விடுவிக்கப்பட்டால் அவர் பிரான்சிற்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவரை நியூயார்க் சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக நீதிமன்றத் தகவல்கள் கூறின.
அதைத் தொடர்ந்து நியூயார்க் அருகே ரிகர்ஸ் தீவில் உள்ள மிகவும் ஆபத்தான சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு 11 அடி நீளமும், 13 அடி அகலமும் உள்ள ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் மட்டுமே சிறையில் உள்ளார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரை மற்ற கைதிகள் தாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே அவர் தனியாக அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரி வித்தனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 62 வயதான கான், சனிக்கிழமை நியூயார்க்கில் கைது செய்யப் பட்டார். நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் அருகேயுள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அவர் தங்கியிருந்த போது ஓட்டல் அறையை சுத்தம் செய்ய வந்த 32 வயதுப் பெண்ணை அவர் கற்பழிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரான்சில் 2012-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த கான், இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது பிரஞ்சு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவரைக் கைது செய்து நியூயார்க்கில் சிறையில் அடைத் திருப்பதற்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரசல்ஸில் ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டிய திரு கான் தற்போது நியூயார்க் சிறையில் உள்ளார். அனைத்துலக நிதி அமைப்பின் தலைவர் ஒருவர் இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது உலகளவில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
திரு கான் ஏற்கனவே இது போன்ற விவகாரத்தில் சிக்கிய போதிலும் தற்போதைய விவகாரம் அவரின் பெயருக்கும் புகழுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
அத்துடன் அவருக்குப் பதிலாக அனைத்துலக பண நிதியத்தின் தலைவராக யார் பொறுப்பேற்பார் என்று கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஒருவர், கான் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். 2002-ம் ஆண்டு டொமினிக்கை ஒரு பேட்டி எடுக்க சென்றபோது அவர் தன்னை கற்பழித்ததாக அந்தப் பெண் கூறியிருக்கிறார். ஆனால் அப்போது இதுபற்றி புகார் கொடுக்கவில்லை என்றும் ஆனால் தற்போது புகார் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment