வாழ்க்கைச் செலவுக்கேற்ப தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும்.
இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம்.
வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கேற்ப அரச மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தை இருபத்தைந்து சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் தனது மேதின தீர்மானத்தில் கோரிக்கையை முன்வைத்துள்ளது. சங்கத்தின் மேதினக் கூட்டம் நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலக கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவரும், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருடான வை.எல்.சுலைமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.நடராசாவினால் வாசிக்கப்பட்டு சபையோரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக உப பிரதேச செயலகமாக அதிகாரங்கள் அற்ற நிலையில் இயங்கி வரும் கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தை முழு நிறைவான அதிகாரங்களைக் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டும்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள காணியற்ற அரச ஊழியர்களுக்கு பொருத்தமான காணிகளை இனங்கண்டு பகிர்ந்தளிப்பதோடு அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச சேவையாளர்களுக்கென தனியான வீடமைப்புத் திட்டம் ஒன்றையும் ஏற்படுத்துமாறு காணி மற்றும் வீடமைப்பு அமைச்சை கோருதல்.
கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுக்களுக்கான தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை சபைகளை மீண்டும் ஏற்படுத்துவதுடன் அவற்றினை மீண்டும் ஏற்படுத்துவதுடன் அவற்றினை தொடர்ந்தும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வருடாந்த இடமாற்றத் திட்டத்தில் பாரபட்சங்களைத் தவிர்க்கும் பொருட்டு தொழிற்சங்க ஆலோசனையும் அங்கீகாரமும் பெறுவதுடன் வருடாந்த இடமாற்ற சபைக்குரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு முறையான அழைப்புக் கடிதங்களை வழங்க கிழக்கு மாகாண பிரதம செயலாளர் முன்வர வேண்டும்.
மேலும் இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் பிரச்சினைகளும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றுக்கான தீர்வும் எனும் தொனிப் பொருளில் கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் உரையாற்றினார். மேற்படி தீர்மானங்களடங்கிய மகஜர் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment