பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி எந்ந நாட்டிலும் இல்லை. யுஎன்பி
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு திட்டம் உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல் தொடர்பாக அரசமைப்பிலோ, பல்கலைக்கழக சட்டத்திலோ, சர்வதேச மனித உரிமை பட்டயத்திலோ எதுவும் இல்லை. இப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுத் தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற போது . இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது விரிவாக
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாறான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினால் அதனை சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும். மாறாகத் தன் விருப்பின் பேரில் அரசு நினைத்ததை நடத்தி பல்கலை மாணவர்களின் எதிர்காலத்தை இருளாக்க இடமளிக்க முடியாது. சட்டங்களுக்கு முரணாக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை இதன் மூலம் விளங்குகிறது.இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் சென்று இந்தப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை இன மாணவர்கள் உளரீதியாகப் பாதிப்படைவார்கள். அத்துடன், இராணுவப் பயிற்சி தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கும், மக்களுக்கும் எவ்வித அறிவித்தலையும் அரசு விடுக்கவில்லை.
பல்கலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதன் ஊடாக அவர்கள் மத்தியில் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பலாம் என்று ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது ஒரு வேடிக்கையான கதையாகும். ஏனென்றால் இன்று நாட்டில் உள்ள ஆட்சியாளர்களிடம் ஒழுக்கம் உள்ளதா? அவர்களுக்கு ஒழுக்கம் என்ற ஒன்று இருக்குமானால் நிச்சயமாக நாட்டு மக்களும், மாணவர்களும் ஒழுக்கமாக செயற்படுவார்கள். மாறாக, ஆட்சியாளர்களுக்கு ஒழுக்கம் இல்லாமல் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைத் திணிப்பது எப்படி?
இலங்கையில் அரச தீவிர வாதம் நடைமுறையில் உள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட சர்வதேச நாடுகள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறு இருக்க, பல்கலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தால் சர்வதேசம் கூறும் விடயம் உண்மையாகிவிடும். இப்படி அவர் கூறியுள்ளார் .
இராணுவப்பயிற்சியல்ல ஆளுமைப் பயிற்சியே வழங்கப்படும்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அன்றி சிறந்த எதிர்காலத் தலைவர்களாக மாற்றுவதற்கான ஆளுமை பயிற்சியே வழங்கப்படுகிறது.ஆளுமை விருத்தி, திறன் விருத்தி, தலைமைத்துவம், வரலாறு, சமூக ரீதியான பழக்கவழக்கங்கள், பாலியல் ரீதியான வன்முறைகள், சட்டம் ஒழுங்கு, தேக ஆரோக்கியம் உட்பட 15 அம்சங்கள் தொடர்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.
இந்தப் பயிற்சியினூடாக ரியூசன் மற்றும் உயர்தர வகுப்பு மனநிலையில் இருந்து விலகி பல்கலைக்கழக கல்விக்கு ஏற்ற மனநிலை மாணவர்களுக்கு வழங்கப்படும். பகிடி வதையும் முற்றாக ஒழிக்கப்படு மெனவும் அமைச்சர் கூறினார் விரிவாக
பல்கலைக்கழக மாண வர்களுக்கான ஆளுமை பயிற்சி குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழே பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர் பில் சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். ஆனால், ஒரு மாணவரோ பெற்றோரோ இதனை எதிர்க்கவில்லை.
இந்த மூன்று வாரப்பயிற்சி குதூகலமாக வும். மகிழ்ச்சியாகவும் இருக்கும். போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகம் வரும் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு உகந்த மனநிலையையும் உடற்தகைமையையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிக ளிலும் பயிற்சி வழங்கப்படும். முதற் கட்டமாக 10 ஆயிரம் மாணவர்களுக்கு 23ம் திகதி 28 முகாம்களில் பயிற்சி வழங்க உள்ளோம். சுகவீனமோ தவிர்க்க முடியாத காரணமோ தவிர சகல மாண வர்களும் இந்த பயிற்சி முகாமுக்கு வரவேண்டும். பல்கலைக்கழக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக விரி வுரையாளர்களே மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
பல்கலைக்கழகங்களில் இருந்து 90 வீதம் பகிடிவதை ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் பகிடி வதையை முழுமையாக ஒழிக்க விசேட திட்டம் முன்னெடுக்கப்படும். பகிடி வதையால் ஈடுபடும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டும் விலக்கப்படுவர். ஆளுமைப் பயிற்சி மூலம் பகிடி வதை வழங்கும் மனநிலை மாறும் என்று நம்புகிறோம்.
இந்தப் பயிற்சி முகாம் குறித்து பெற்றோர் அஞ்சத் தேவையில்லை. அவர்களுக்கு தமது பிள்ளைகளை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றார். அமைச்சின் செயலாளர் சுனில் நவரத்ன கூறியதாவது,
ஆளுமைப்பயிற்சி தொடர்பில் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறிய போதும் அவர்களிடம் தலைமைத்துவ திறமையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தீர்வு காணும் ஆளுமையோ கிடையாது. எதிர்காலத்திற்கு உகந்த தலைவர்களாக அவர்களை மாற்றுவதே எமது நோக்கம்.
ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கக்கூடிய வசதி இராணுவ முகாம்களில் உள்ளது. அதனாலே இராணுவ பயிற்சி முகாம்களில் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
பாடக்குறிப்புகளை பார்த்து எழுதிப்பழகிய மாணவர்களின் மனநிலையை பல்கலைக்கழக கல்வி கற்க ஏற்றவாறு மாற்ற வேண்டும். அவர்களுக்கு செயன்முறை அறிவு, தொழில்நுட்ப அறிவு, மனிதத் திறன்கள் என்பன வழங்க வேண்டியுள்ளது. பரந்துபட்ட நோக்கத்துடனே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டத்தில் 5931 பெண்களுக்கும் 4069 ஆண்களுக்கும் பயிற்சி வழங்கப்படுவதோடு, ஜூன் 16ம் திகதி 12 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 200 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
உபவேந்தர்
கொத்தலாவெல பாதுகாப்பு அகடமி உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கூறியதாவது,
தமிழ்மொழி மூல மாணவர்கள் 2 ஆயிரம் பேரும் 4 முகாம்களில் தமிழில் பயிற்சி வழங்கப்படும். முஸ்லிம் மாணவர்கள் தமது மத அனுஷ்டானங்களை செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
உடற்பயிற்சி, சுய ஒழுங்கு, பொறுப்புகளை பற்றிய தெளிவு என்பனவும் வழங்க உள்ளதோடு தலைமைத்துவப் பயிற்சிக்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். பாலியல் துன்புறுத்தல் பற்றி மட்டுமன்றி பெண்களுக்கு ஒப்பனை பயிற்சியும் வழங்க உள்ளோம் என்றார்.
யாழ் முன்னாள் உபவேந்தர் மோகனதாஸ் கூறியதாவது, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாணவர்களுக்கு ஆளுமைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். எதிர்காலத்திற்கு ஏற்ற தலைவர்களை உருவாக்குவதற்கான அடித்தளம் இதனூடாக இடப்படுகிறது.
0 comments :
Post a Comment